வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) 9 இடங்களில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்;
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) 9 இடங்களில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 396 நகர்ப்புற வார்டு உறுப்பினர் பதவிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் அவர் கூறியதாவது:-
வாக்கு எண்ணிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியிலும், திருச்செந்தூர், காயல்பட்டினம் நகராட்சிகள், ஆறுமுகநேரி, ஆத்தூர் மற்றும் காணம் நகர பஞ்சாயத்துகளுக்கு வீரபாண்டியன்பட்டினம் புனித தோமையார் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவைகுண்டம், ஏரல், பெருங்குளம் மற்றும் சாயர்புரம் ஆகிய நகர பஞ்சாயத்துக்களுக்கு சாயர்புரம் போப்ஸ் கல்லூரியிலும், ஆழ்வார்திருநகரி மற்றும் தென்திருப்பேரை நகர பஞ்சாயத்துகளுக்கு ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப் பள்ளியிலும், உடன்குடி, சாத்தான்குளம் மற்றும் நாசரேத் ஆகிய நகர பஞ்சாயத்துகளுக்கு நாசரேத் பிரகாசபுரம் புனிதமரியன்னை நடுநிலைப் பள்ளியிலும், கோவில்பட்டி நகராட்சிக்கு கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கழுகுமலை நகர பஞ்சாயத்துக்கு கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் கயத்தாறு நகர பஞ்சாயத்துக்கு கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மேல்நிலைப் பள்ளியிலும், விளாத்திக்குளம், எட்டயாபுரம் மற்றும் வி.புதூர் நகர பஞ்சாயத்துகளுக்கு எட்டயாபுரம் பாரதியார் சென்டனரி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 9 இடங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
மூன்றடுக்கு பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையங்களில் தற்போது கண்காமிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் முதல் அடுக்காகவும், ஆயுதப்படை போலீசார் 2-வது அடுக்காகவும், தாலுகா போலீசார் 3-வது அடுக்காகவும், 600 போலீசார் துப்பாக்கி ஏந்தியும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு நாளை 4 காவல்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 14 ஏ.எஸ்.பி. மேற்பார்வையில் 40 இன்ஸ்பெக்டர்கள், 230 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். எனவே யாராவது வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
இக்கூட்டத்தில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், தூத்துக்குடி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ், விளாத்திக்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ், கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், மணியாச்சி டி.எஸ்.பி. சங்கர், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன், சாத்தான்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ, மாவட்ட குற்றப்பிரிவு ஜெயராம், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு பிரேமானந்தன், மாவட்ட குற்றப்பிரிவு ஜெயராம் உட்பட பல கலந்துகொண்டனர்.