கார் மோதி தொழிலாளி பலி
கோவில்பட்டி அருகே கார் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே கார் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக பலியானார். விபத்தை ஏற்படுத்தி விட்டு காரை நிறுத்தாமல் தப்பி சென்ற டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.
தொழிலாளி
கோவில்பட்டி அருகே உள்ள திருவேங்கடபுரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் சித்திரகுப்தன் (வயது 33). இவர் நாலாட்டின்புத்தூரில் உள்ள தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 9 மணி யளவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சாலையோரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
கார் மோதியது
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
கார் மோதியதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்ததும் நாலாட்டின் புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சித்திரகுப்தன் பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டிரைவருக்கு வலைவீச்சு
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரையும், அதை ஓட்டிச்சென்றவரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.