‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கட்டிட கழிவுகள்
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அவினாசி பாலம் ரவுண்டானா பகுதியில் சாலையில் பெரிய பள்ளம் இருந்தது. அந்த பள்ளத்தை சரி செய்யாமல் கட்டிட கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த கட்டிட கழிவுகளை அகற்றி அங்கு சாலையை சரி செய்ய வேண்டும்.
ராணி, கோவை.
பயணிகள் நிழற்குடை
கிணத்துக்கடவில் பழைய சோதனைச்சாவடி அருகே இருந்த பயணிகள் நிழற்குடை சாலை விரிவாக்க பணியின்போது அகற்றப்பட்டது. தற்போது அந்த பகுதியில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் இருப்பதால், பொதுமக்கள் சாலையோரம் வெயிலில் நின்று பஸ்சில் ஏறி பயணம் செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பயணிகள் நிழற்குடை அமைக்க முன்வருவார்களா?
முருகேசன், சிக்கலாம்பாளையம்.
பொது கழிப்பிடம் கட்டப்படுமா?
கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் பழங்குடியின கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உரிய வசதிகளுடன் பொதுக்கழிப்பிடம் கட்டப்படாததால், பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அடிக்கடி வனவிலங்குகள் தாக்குதலால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே தண்ணீர் வசதியுடன் பொதுகழிப்பிடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரங்கன், கரிக்கையூர்.
ஒளிராத சிக்னல்கள்
கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள சில சிக்னல்கள் அடிக்கடி ஒளிராமல் போகிறது. இதனால் அந்த இடங்களில் விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க சிக்னல்கள் பராமரிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, கிணத்துக்கடவு.
தெருவிளக்குகள் வேண்டும்
கோத்தகிரி அருகே உள்ள செல்வபுரம் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அங்கு போதுமான மின்கம்பங்கள் இருப்பினும், தெருவிளக்குகள் அமைத்து தரப்படவில்லை. எனவே பொதுமக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே இந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துரைராஜ், கோத்தகிரி.
போக்குவரத்து நெரிசல்
ஆனைமலையில் உள்ள முக்கோணம் பகுதியில் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆனால் அதை சீரமைக்க போக்குவரத்து போலீசார் பணியில் இருப்பது இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பானுமதி, ஆனைமலை.
குண்டும், குழியுமான சாலை
கோவை சங்கனூரில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் வாகனங்களும் பழுதடைந்து விடுகின்றன. குறிப்பாக மழை பெய்யும்போது மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. எனவே அந்த சாலையை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
பிரேம்குமார், கணபதி.
இருக்கைகள் அமைக்கப்படுமா?
சோமனூர் பஸ் நிலையத்தில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக ஓய்வு அறை உள்ளது. ஆனால் அங்கு அமர இருக்கைகள் அமைக்கப்படவில்லை. இதனால் முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் கால் கடுக்க நின்ற வேண்டி உள்ளது. பஸ்கள் வர நீண்ட நேரம் ஆகும் சமயத்தில் அவர்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே அங்கு பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், சோமனூர்.
வாகன ஓட்டிகள் அவதி
கோவை செட்டி வீதியில் இருந்து செல்வபுரம் செல்லும் வழியில் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. குண்டும், குழியுமாக உள்ள அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. மேலும் மழை பெய்தால் சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
சுந்தர், செல்வபுரம்.
குடிநீர் குழாயில் உடைப்பு
கோவை ஜி.என்.மில்ஸ் அருகே சுப்பிரமணியபாளையம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுபோன்று வீணாகும் குடிநீர் அருகில் செல்லும் சாக்கடையில் கலக்கிறது. கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதை உடனுக்குடன் சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
தர்வின், ஜி.என்.மில்ஸ்.