மலைரெயில் பாதையில் 360 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
ஊட்டி-குன்னூர் இடையே மலைரெயில் பாதையில் 360 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
ஊட்டி
ஊட்டி-குன்னூர் இடையே மலைரெயில் பாதையில் 360 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
ஐகோர்ட்டு உத்தரவு
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு மலை ரெயில் பாதை செல்கிறது. ஹில்குரோவ் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு இருந்தது. இதனால் யானைகள் வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் அபாயம் காணப்பட்டது. தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தடுப்புச்சுவரை இடிக்க நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் அது தொடர்பான வழக்கு விசாரணையில் நீலகிரி மலை ரெயில் பாதையில் யானைகள் வழித்தடத்தில் உள்ள சுவர்களை இடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் ரெயில் பாதையில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற அறிவுறுத்தியது.
குழுக்களாக பிரிந்து...
இதைத்தொடர்ந்து வனத்துறையினர், ரெயில்வே ஊழியர்கள், தன்னார்வலர்கள் குழுக்களாக பிரிந்து மலை ரெயில் பாதையில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், பொருட்களை அகற்றி தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி குன்னூர்-கேத்தி இடையே குன்னூர் வனத்துறையினர், தன்னார்வலர்கள் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர்.
கேத்தி-லவ்டேல் இடையே மலை ரெயில் பாதையில் குந்தா வனத்துறையினர் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர். லவ்டேல்-ஊட்டி இடையேயான மலை ரெயில் பாதையில் ஊட்டி தெற்கு வனச்சரகத்தினர், தன்னார்வலர்கள் 110 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர். இதில் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவை வீசப்பட்டு இருந்தது தெரியவந்தது. மொத்தம் 360 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டன.
நடவடிக்கை
ஏற்கனவே குன்னூர்-ஹில்குரோவ் இடையே 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமாக திகழும் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பாதைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனை சுற்றுலா பயணிகள் முறையாக கடைபிடிக்க செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.