தகராறில் ஈடுபட்ட திமுக பிரமுகரை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் தேர்தலின் போது தகராறில் ஈடுபட்ட திமுக பிரமுகரை கண்டித்தும் மறுதேர்தல் நடத்தக்கோரியும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் தேர்தலின் போது தகராறில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகரை கண்டித்தும் மறுதேர்தல் நடத்தக்கோரியும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசில் புகார்
திருவண்ணாமலை நகராட்சியின் 13-வது வார்டுக்கான தேர்தல் நேற்று திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மாலையில் வாக்குச்சாவடி மையத்தில் தி.மு.க.வினருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் பா.ஜ.க. வேட்பாளரின் கணவரும், பா.ஜ.க. மாவட்ட செயலாளருமான சதீஷ்குமாரை எதிர்தரப்பை சேர்ந்த ஒருவர் தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகராறில் ஈடுபட்டதாக தி.மு.க. நிர்வாகிகள் மீது திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் சதீஷ்குமார் புகார் மனு அனுப்பி உள்ளார்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் தி.மு.க.வை கண்டித்து திருவண்ணாமலை அறிவியல் பூங்கா எதிரில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ரமேஷ், மாவட்ட செயலாளர் சிவசங்கரன், கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தகராறில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும், மறு தேர்தல் நடத்த கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
இழிவான செயல்
தொடர்ந்து மாநிலத் துணைத் தலைவர் நரேந்திரன் கூறுகையில், பல்வேறு பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடைபெற்று உள்ளது.
இதில் சில பகுதிகளில் தி.மு.க. இழிவான செயலில் ஈடுபட்டுள்ளது. அதில் முதன்மையான மாவட்டமாக திருவண்ணாமலை உள்ளது. தி.மு.க.வினர் பல இடங்களில் கள்ள ஓட்டுக்கள் போட்டு உள்ளனர்.
தி.மு.க. பிரமுகர் ஒருவர் எங்கள் நிர்வாகியை தாக்கியுள்ளார். மேலும் கர்ப்பிணி ஒருவரையும் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை நிச்சயம் இதை நாங்கள் விடப்போவது இல்லை. நடந்த சம்பவங்களுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது.
அதனை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை நகராட்சியில் 25 வார்டுகளில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. எனவே திருவண்ணாமலை நகராட்சியில் மறு தேர்தல் நடத்த வேண்டும்.
தகராறில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநில தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலைக்கு வந்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட துணைத் தலவைர் அருணை ஆனந்தன் நன்றி கூறினார்.