நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கடைகள், தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கடைகள், தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.;
ஈரோடு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் நேற்று விறுவிறுப்பாக தேர்தல் நடந்தது. பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கூடம், கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் பெரிய, சிறிய தொழில் நிறுவனங்கள், கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக ஈரோடு ஆர்.கே.வி. ரோடு, ஈ.வி.என்.ரோடு, மேட்டூர் ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, பொன் வீதி போன்ற பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மேற்கண்ட இடங்களில் நேற்று மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் அதே நேரம் அத்தியாவசிய பொருட்களுக்கான பால் நிலையம், மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. இதேபோல் ஒரு சில பேக்கரி, டீ கடைகளும் திறந்திருந்தன. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது, தொழிலாளர் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.