‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-20 01:24 GMT
பழுதடைந்து காணப்படும் தூண்கள் 
டி.என்.பாளையத்தை அடுத்த கொண்டயம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அய்யப்பன் நகரில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மேல் பகுதியில் இருந்து குடிநீர் கசிந்து வருகிறது. இதனால் குடிநீர் தொட்டியின் தூண்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக தொட்டியின் தூண்களில் உள்ள இரும்பு கம்பிகள் எலும்புக்கூடுகள் போல் வெளியே தெரிகின்றன. எனவே குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது புதிதாக குடிநீர் தொட்டி கட்ட வேண்டும். 
பொதுமக்கள், அய்யப்பன் நகர்.


மின்இணைப்பு வழங்க வேண்டும்
அந்தியூர் புதுப்பாளையத்தில் ரோடு விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ரோட்டில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைப்பதற்காக சாலையோரம் 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் புதிதாக நடப்பட்டன. மின் இணைப்பு கொடுக்கப்படாததால் வெறும் மின் கம்பங்கள் மட்டுமே உள்ளன. பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பழைய மின் கம்பத்தை அகற்ற வேண்டும். மேலும் புதிய மின் கம்பங்களுக்கு மின் இணைப்பு கொடுக்க மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
கணபதி, புதுப்பாளையம்.


தார்சாலை வசதி
கோபி வேட்டைக்காரன் கோவில் பகுதியில் உள்ளது கிழக்குகரடு. இங்குள்ள வீதியில் சாக்கடை வசதி, தார்சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே சாக்கடை வசதியும், தார்சாலை வசதியும் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.


நிழற்குடை அமைக்கப்படுமா?
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் பெருந்துறை ரோட்டில் பஸ் நிறுத்தம் உள்ளது. திருப்பூர், கோவை, அவினாசி, ஊட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கிறார்கள். அங்கு நிழற்குடை இல்லாததால் பயணிகள் பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே நிழற்குடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரியா, ஈரோடு.

ஆபத்தான பள்ளம்
ஈரோடு மேட்டூர் ரோட்டில் இருந்து முனிசிபல் காலனி செல்லும் ரோட்டில் ஆங்காங்கே ரோடுகளில் பள்ளங்கள் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தட்டுத்தடுமாறி கீழே விழுகிறார்கள். மேலும் பேராபத்துகள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் காணப்படும் பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், முனிசிபல் காலனி.

மின்மாற்றியை சுற்றிலும் முட்புதர்கள்
அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) உள்ளது. அந்த மின்மாற்றியை சுற்றிலும் முட்புதர்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மின்மாற்றியில் திடீரென தீப்பொறி ஏற்பட்டால் புதர்கள் தீப்பற்ற வாய்ப்பு உள்ளது. இதனால் மின்மாற்றியிலும் தீப்பற்றலாம். எனவே மின்மாற்றியை சுற்றிலும் உள்ள முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
ரவீந்திரன், புதுப்பாளையம்.

நாய்கள் தொல்லை
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திரியும் தெரு நாய்கள் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிக்கிறது. மேலும் இருசக்கர வாகனங்கள் செல்லும்போது நாய்கள் குறுக்கே பாய்கிறது. இதன் காரணமாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழேவிழுந்து காயம் அடையும் நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ரோட்டில் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், வீரப்பன்சத்திரம்.

மேலும் செய்திகள்