1,219 மையங்களில் தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைப்பு

ஈரோடு மாவட்டத்தில் 1,219 வாக்குச்சாவடி மையங்களில் நடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Update: 2022-02-20 01:19 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 1,219 வாக்குச்சாவடி மையங்களில் நடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
உள்ளாட்சி தேர்தல்
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 1,219 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது. ஒருசில வாக்குச்சாவடி மையங்களில் கடைசி நேரத்தில் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் முடிந்த பிறகு அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதன்பிறகு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்கப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சீல் வைப்பு
ஈரோடு மாநகராட்சியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரிக்கும், பவானி நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பவானி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கும், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வைரவிழா உயர்நிலை பள்ளிக்கூடத்துக்கும், சத்தியமங்கலம் நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் சத்தியமங்கலத்தில் உள்ள காமதேனு கலை அறிவியல் கல்லூரிக்கும், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் புஞ்சைபுளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இதேபோல் 42 பேரூராட்சிகளிலும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த பேரூராட்சிகளில் ஒதுக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு அரசியல் கட்சியினர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்ட பெட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டு அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்