வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்
நாகர்கோவிலில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் எதிரொலியாக வாக்குச்சாவடியை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் எதிரொலியாக வாக்குச்சாவடியை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆக்கிரமிப்பு
நாகா்கோவில் மாநகராட்சியில் 26-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பாறைக்கால்மடமும் வருகிறது. இங்கு ஆக்கிரமிப்பு பகுதிகளில் சிலர் வசித்து வந்தனர். அவர்களுக்கும் அதே வார்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
பின்னர் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள், அஞ்சுகிராமம் பால்குளத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இடம் பெயர்ந்தனர்.
முற்றுகையிட முயற்சி
இந்த நிலையில் பால்குளம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பொதுமக்கள் சிலர் நேற்று காலை வாக்களிப்பதற்காக நாகர்கோவிலில் உள்ள சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட 26-வது வார்டுக்கான வாக்குச்சாவடிக்கு வந்தனர்.
ஆனால் அவர்களில் சிலருக்கு வாக்காளர்களின் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டு இருந்தது. பட்டியலில் பெயர் இருந்தவர்கள் வாக்குகளை பதிவு செய்துவிட்டனர். ஆனால் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வாக்களிக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர் அவர்கள் அனைவரும் வாக்குச்சாவடியை முற்றுகையிட முயன்றனர்.
அதிகாரிகளுடன் வாக்குவாதம்
அதைத்தொடர்ந்து தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரியான பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார், முற்றுகையிட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் வாக்களிக்க முடியாது எனவும் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைதொடர்ந்து அவர்கள் அனைவரும் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
----
(பாக்ஸ்)
வாக்களிக்க மாற்று ஏற்பாடு- கலெக்டர் தகவல்
இதுபற்றி கலெக்டர் அரவிந்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
ஆக்கிரமிப்பு காரணமாக பாறைக்கால்மடத்தில் இருந்து பால்குளத்துக்கு பொதுமக்கள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கான வாக்குச்சாவடி பால்குளத்தில் உள்ளது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட 26-வது வார்டில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட அனைவரும் பால்குளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குகளை பதிவு செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களிக்க அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.
----