மதுரை மாவட்டத்தில் 57.09 சதவீத வாக்குகள் பதிவு

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 57.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதில் மாநகராட்சியில் 53.99 சதவீதமும், 3 நகராட்சியில் 71.33 சதவீதமும், 9 பேரூராட்சிகளில் 79.42 சதவீத வாக்குகளும் பதிவாகி இருக்கிறது.

Update: 2022-02-19 21:29 GMT
மதுரை, 

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 57.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதில் மாநகராட்சியில் 53.99 சதவீதமும், 3 நகராட்சியில் 71.33 சதவீதமும், 9 பேரூராட்சிகளில் 79.42 சதவீத வாக்குகளும் பதிவாகி இருக்கிறது.

313 பதவிகள் 

மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 நகராட்சிகளில் 78 வார்டுகள், பரவை, அலங்காநல்லூர், பாலமேடு, ஏ.வெள்ளாளபட்டி, சோழவந்தான், வாடிப்பட்டி, தே.கல்லுப்பட்டி, பேரையூர் மற்றும் எழுமலை என 9 பேரூராட்சிகளில் உள்ள 135 வார்டுகள் என மொத்தம் 313 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. அதில் மாவட்டத்தில் சராசரியாக மொத்தம் 57.09 சதவீதம் வாக்குகள் பதிவானது.
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் மொத்தம் 53.99 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநகராட்சியில் மொத்தம் 13 லட்சத்து 43 ஆயிரத்து 694 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 6 லட்சத்து 59 ஆயிரத்து 925. பெண்கள் 6 லட்சத்து 83 ஆயிரத்து 626. மூன்றாம் பாலினத்தவர்கள் 143 ஆகும். அதில் மொத்தம் 7 லட்சத்து 25 ஆயிரத்து 396 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதில் ஆண்கள் 3 லட்சத்து 66 ஆயிரத்து 131 பேரும், பெண்கள் 3 லட்சத்து 50 ஆயிரத்து 243 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 22 பேரும் வாக்களித்து இருக்கின்றனர். மாநகராட்சியில் பெண்கள் அதிக வாக்காளர்களாக இருந்தாலும் அவர்கள் குறைந்த அளவே வாக்களித்து இருக்கின்றனர். சதவீத கணக்கின்படி ஆண்கள் 55.48 சதவீதமும், பெண்கள் 52.55 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர்கள் 15.38 சதவீதமும் வாக்களித்து உள்ளனர்.

நகராட்சிகள்
மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 நகராட்சிகளில் உள்ள 78 வார்டுகளில் மொத்தம் 71.33 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. நகராட்சிகளில் மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 323 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். அதில் ஆண்கள் 55 ஆயிரத்து 662. பெண்கள் 59 ஆயிரத்து 660. மூன்றாம் பாலினத்தவர்கள் 1 ஆகும். அதில் மொத்தம் 82 ஆயிரத்து 255 பேர் வாக்களித்துள்ளனர். அதில் ஆண்கள் 39 ஆயிரத்து 379 பேரும், பெண்கள் 42 ஆயிரத்து 876 பேரும் வாக்களித்து இருக்கின்றனர். நகராட்சிகளில் பெண்கள் அதிக அளவு வாக்குப்பதிவு செய்து இருக்கின்றனர். சதவீத கணக்கின்படி ஆண்கள் 70.75 சதவீதமும், பெண்கள் 71.87 சதவீதமும் வாக்களித்து உள்ளனர். இங்குள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் ஒருவர் கூட வாக்களிக்க வில்லை.

பேரூராட்சிகள்
பரவை, அலங்காநல்லூர், பாலமேடு, ஏ.வெள்ளாளபட்டி, சோழவந்தான், வாடிப்பட்டி, தே.கல்லுப்பட்டி, பேரையூர் மற்றும் எழுமலை என 9 பேரூராட்சிகளில் உள்ள 135 வார்டுகளில் மொத்தம் 79.42 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. பேரூராட்சிகளில் மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 69 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். அதில் ஆண்கள் 55 ஆயிரத்து 15. பெண்கள் 58 ஆயிரத்து 47. மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆகும். அதில் மொத்தம் 89 ஆயிரத்து 799 பேர் வாக்களித்துள்ளனர். அதில் ஆண்கள் 43 ஆயிரத்து 388 பேரும், பெண்கள் 46 ஆயிரத்து 409 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் வாக்களித்து இருக்கின்றனர். பேரூராட்சிகளில் பெண்கள் அதிக அளவு வாக்குப்பதிவு செய்து இருக்கின்றனர். சதவீத கணக்கின்படி ஆண்கள் 78.87 சதவீதமும், பெண்கள் 79.95 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர்கள் 28.57 சதவீதமும் வாக்களித்து உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

மேலும் செய்திகள்