நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும்; ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் என ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ஈரோடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் என ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி
ஈரோடு அக்ரஹார வீதி வாக்குச்சாவடி மையத்தில், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அவரது மகன் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் வந்து நேற்று வாக்களித்தார். இதைத்தொடர்ந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். கண்டிப்பாக தி.மு.க. கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தரப்போகிறது.
சமூக நீதி
மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. தமிழகத்தை காப்பாற்றக்கூடிய வலிமையும், சக்தியும் பெற்ற ஒரே முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ற முறையில் அவருக்கு ஆதரவாக மக்கள் உள்ளனர். தமிழர்களின் மானம், சுயமரியாதை, சமூக நீதி, கலாசாரம், மொழி காப்பாற்றப்பட வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என்ற மன நிலையில் மக்கள் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து வருகின்றனர்.
தி.மு.க. பொய்யான பிரசாரம் செய்வதாக முன்னாள் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். சொல்பவர் யார் என்றால் ஒரு பொய்யான மனிதர். பொய்யை தவிர வேறு எதுவும் அவர் பேசமாட்டார். .
டெபாசிட்
பாரதீய ஜனதா கட்சி அ.தி.மு.க.வுடன் இருந்தபோது டெபாசிட் பெற்றார்கள்.
தற்போது அ.தி.மு.க.வோடு கூட்டணி இல்லை என்ற காரணத்தால் கண்டிப்பாக தமிழகத்தில் எங்கும் பா.ஜ.க.வினர் டெபாசிட் கூடபெற மாட்டார்கள்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.