போலி ஆவணங்கள் தயாரித்து அரசு நிலத்தை விற்ற நகரசபை முன்னாள் கமிஷனர் உள்பட 2 பேர் கைது

போலி ஆவணங்கள் தயாரித்து அரசு நிலத்தை விற்ற உன்சூர் நகரசபை முன்னாள் கமிஷனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-19 21:10 GMT
மைசூரு: போலி ஆவணங்கள் தயாரித்து அரசு நிலத்தை விற்ற உன்சூர் நகரசபை முன்னாள் கமிஷனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரசு நிலம் 

மைசூரு மாவட்டம் உன்சூர் டவுன் பகுதியில் அரசுக்கு சொந்தமான 6.8 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தை அரசு பணிகள் மற்றும் சாக்கடை கால்வாய்கள் அமைப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாசில்தார் உன்சூர் நகரசபைக்கு ஒதுக்கீடு செய்திருந்தார். இந்த நிலத்தில் சில பகுதி தனியாருக்கு வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை பரிசீலனை செய்யும் பணியில் நகரசபை மற்றும் நில அளவை அதிகாரிகள் ஈடுபட்டனர். 

அப்போது அங்கிருந்த நிலத்தின் ஒரு பகுதி ரமேஷ் என்பவரின் பெயரில் இருந்தது. அங்கு ரமேஷ் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். ஆனால் நகரசபை ஆவணத்தில் அவை அரசு நிலம் என்றே காட்டியது. இதையடுத்து ரமேசிடம் விசாரித்த அதிகாரிகள், அந்த நிலத்திற்கான ஆவணங்களை கேட்டனர். அவர் நகரசபை சார்பில் தனக்கு வழங்கப்பட்ட பட்டாவை காண்பித்தார். அப்போது சட்டவிரோதமாக அரசு நிலத்தை பட்டா செய்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது. 

2 பேர் கைது 

இது பற்றி மேலும் விசாரித்தபோது, நகரசபை முன்னாள் கமிஷனர் சிவப்பாநாயக் மற்றும் அவரது உதவியாளர் அனிதா குமாரி ஆகியோர் தான் போலி ஆவணங்களை தயாரித்து தனியாருக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதை முறையான ஆவணங்கள் மூலம் உறுதி செய்த, நகரசபை மற்றும் நில அளவை பிரிவு அதிகாரிகள், உன்சூர் போலீசிற்கு புகார் அளித்தனர். 

அவர்கள் விசாரணை நடத்தி, நகரசபை முன்னாள் கமிஷனர் சிவப்பாநாயக் மற்றும் அவரது உதவியாளராக செயல்பட்ட பெண் ஊழியர் அனிதா குமாரி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது உன்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்