வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி; உறவினர் உள்பட 2 பேர் கைது
வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு: வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கத்திக்குத்து
உடுப்பி மாவட்டம் மணிப்பால் அருகே சிவள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமாநாத் ராய் (வயது 27). இவருடைய மனைவி சுமதி. இந்த நிலையில் நேற்று ரமாநாத் ராய் வெளியே சென்றிருந்தார். இதனால் சுமதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் அவருடைய வீட்டுக்கு 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் சுமதியுடன் தகராறு செய்ததுடன், அவரை கத்தியால் குத்தியதாக தெரிகிறது.
இதனால் மயங்கி விழுந்த சுமதியை, அவர்கள் 2 பேரும் பெரிய பெட்டியில் வைத்து அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றனர். அந்த சமயத்தில், ரமாநாத் ராய் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
2 பேர் பிடிபட்டனர்
அப்போது கதவு பூட்டப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை தட்டினார். அந்த சமயத்தில் வீட்டின் கதவை திறந்து கொண்டு 2 பேர் தப்பியோட முயன்றனர். உடனே சுதாரித்து கொண்ட அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் பிடித்தார். பின்னர் அவர் உள்ளே சென்ற பார்த்தபோது, ஒரு பெரிய பையில், கத்திக்குத்து காயங்களுடன் சுமதி மயங்கிய நிலையில் இருந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரமாநாத் ராய், சுமதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்விரோதம் காரணமா?
இதையடுத்து பிடிபட்ட 2 பேரும் மணிப்பால் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் பெங்களூருவை சேர்ந்த மிதுன், நாகேஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களில் மிதுன், சுமதியின் உறவினர் ஆவார். முன்விரோதம் காரணமாக சுமதியை மிதுன் கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மணிப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.