நிலத்தகராறில் முன்னாள் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் படுகொலை; விவசாயி கைது
பங்காருபேட்டையில், நிலத்தகராறில் முன்னாள் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விவசாயியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.;
கோலார் தங்கவயல்: பங்காருபேட்டையில், நிலத்தகராறில் முன்னாள் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விவசாயியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
முன்னாள் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா தம்பேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பாகவுடா(வயது 53). இவர் முன்னாள் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஆவார். இவருக்கும், இதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான வெங்கடேஷ்(52) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று நிலப்பிரச்சினை தொடர்பாக இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த வெங்கடேஷ் கிருஷ்ணப்பாகவுடாவை கத்தியால் குத்தி படுகொலை செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து பங்காருபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கிருஷ்ணப்பகவுடாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கைது
பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். அப்போது அவர் தனது உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வெங்கடேசை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.