மதுரை அரசு ஆஸ்பத்திரி மையம் 2 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை

தமிழகத்திலேயே முதலாவதாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தடுப்பூசி மையம் 2 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது.

Update: 2022-02-19 20:48 GMT
மதுரை,

தமிழகத்திலேயே முதலாவதாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தடுப்பூசி மையம் 2 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு, தற்போது 15 வயது நிரம்பியவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கான கொரோனா தடுப்பூசி மையம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் மூலமும், செல்போன் எண் மூலமும் முன்பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

2 லட்சம் தடுப்பூசி

இந்தநிலையில், நேற்றுடன் (19-ந்தேதி), மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கான தடுப்பூசி மையத்தில் 2 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் கூறுகையில், "தமிழகத்தில் ஒரே மையத்தில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தி, மதுரை அரசு ஆஸ்பத்திரி முதல் இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது. அதன்படி இந்த மையத்தில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் இந்த மையத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 4 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 86 ஆயிரத்து 578 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும், 5 ஆயிரத்து 382 பேருக்கு 3-ம் தவணை தடுப்பூசியும், 15 முதல் 18 வயது வரை உள்ள 1140 பேருக்கு தடுப்பூசி என 2 லட்சத்து ஆயிரத்து 104 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனைக்காக அந்த மையத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், தரவு நுழைவு ஆபரேட்டர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

மேலும் செய்திகள்