ஹிஜாப் அணிந்து ஓட்டுப்போட வந்த பெண்களுக்கு எதிர்ப்பு ெதரிவித்த பா.ஜனதா முகவர்
ஹிஜாப் அணிந்து ஓட்டுப்போட வந்த பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதா முகவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அவர் தீவிர விசா ரணைக்கு பின் கைது செய்யப்பட்டார்.
மேலூர்,
ஹிஜாப் அணிந்து ஓட்டுப்போட வந்த பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதா முகவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அவர் தீவிர விசா ரணைக்கு பின் கைது செய்யப் பட்டார்.
ஹிஜாப் அணிந்து வந்த பெண்கள்
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் 8-வது வார்டுக்கு உட்பட்ட அல் அமீன் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில், பகல் 11 மணி அளவில் முஸ்லிம் பெண்கள் சிலர் வாக்களிக்க வந்தனர்.
அவர்கள் ஹிஜாப் அணிந்தபடி வந்திருந்தனர். அவர்கள் வாக்களிக்க வரிசையில் நின்ற போது, வாக்குச்சாவடிக்குள் இருந்த பா.ஜனதா கட்சியின் முகவர் கிரிநந்தன் (வயது 45) திடீரென எழுந்து, வாக்களிக்க வந்திருப்பவர்கள் யார்? என அடையாளம் காண வேண்டும் எனக்கூறியதுடன், முஸ்லிம் பெண்களிடம் ஹிஜாப்பை கழற்றுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு முஸ்லிம் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே பா.ஜனதா முகவரை வாக்குச்சாவடிக்குள் இருந்த பிற கட்சிகளின் முகவர்கள் கண்டித்தனர். ஆனால் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
வெளியேற்றம்
உடனே வாக்குச்சாவடியை விட்டு மற்ற முகவர்கள் வெளியேறினர். உடனே வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. உடனே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் பா.ஜனதா முகவர் கிரிநந்தனை வாக்குச்சாவடியைவிட்டு வெளியேற்றினர். உடனே பா.ஜனதா கட்சியை சேர்ந்த பெண் ஒருவர், அங்கு முகவராக வந்தார்.
இதனை தொடர்ந்து சற்று நேர இடைவெளிக்கு பின்பு அங்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.
தாக்க முயற்சி
இதற்கிடையே வெளியேற்றப்பட்ட கிரிநந்தன், அதே வார்டில் உள்ள வேறு ஒரு வாக்குச்சாவடிக்குள் செல்ல முயற்சி செய்தார். ஆனால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி, விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல முற்பட்டனர்.
அப்போது, அவர் எதிர்ப்பு கோஷமிட்டார். உடனே அங்கு இருந்த சில கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் கிரிநந்தனை தாக்க முயன்றனர். ஆனால் போலீசார் அவரை அவசரம் அவசரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றுவிட்டனர். இ்ந்த சர்ச்சையால் அந்த வாக்குச்சாவடியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேர்தல் ஆணையர் விளக்கம்
இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்து சென்னையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பெண் வாக்காளர் ஒருவர் 'ஹிஜாப்' உடை அணிந்து கொண்டு வாக்களிக்க சென்றதை, அங்கிருந்த வேட்பாளரின் முகவர் ஒருவர் வாக்களிக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வாக்காளர்கள் குறிப்பிட்ட உடையைத்தான் அணிந்துவர வேண்டும் என்று எந்தவித கட்டாயமும் இல்லை. இந்த விவகாரம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது
இந்த நிலையில் மேலூரில் ஹிஜாப் விவகாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குச்சாவடி பா.ஜ.க. முகவர் கிரிநந்தனை தீவிர விசாரணைக்கு பின்னர் மேலூர் போலீசார் கைது செய்தனர். அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.