2 ஓட்டு போட்ட தி.மு.க. பெண் வேட்பாளர்
2 ஓட்டு போட்ட தி.மு.க. பெண் வேட்பாளர்;
திருச்சி, பிப்.20-
திருச்சி கருமண்டபத்தில் மற்றொரு வாக்காளர் ஓட்டையும் சேர்த்து 2 ஓட்டு போட்ட தி.மு.க. பெண் வேட்பாளருக்கு எதிராக இதர வேட்பாளர்கள் போர்க்கொடி தூக்கினர். அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
56-வது வார்டுக்கு 8 பேர் போட்டி
திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட 56-வது வார்டு (பெண்கள் பொது) கருமண்டபம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் மனைவி மஞ்சுளாதேவி (வயது 41) தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.
மேலும் அந்த வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக வி.ராஜலட்சுமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக பாண்டிமீனா, தமிழக மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக சவுந்தர்யா, பா.ஜனதா வேட்பாளராக சத்தியகலா, தே.மு.தி.க. வேட்பாளராக சர்மிளா மற்றும் சுயேச்சைகளாக கவிதா பெருமாள், யோகலட்சுமிஆகிய 8 பேர் போட்டியிட்டனர்.
அதிர்ச்சி
56-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் காலை முதல்விறுவிறுப்பானவாக்குப்பதிவுநடந்துகொண்டிருந்தது. கருமண்டபம் கலிங்கப்பட்டி புதுத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி முத்துலெட்சுமி (54) என்பவர், கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண்: 647-ல் அரசால் வழங்கப்பட்ட பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் காலை 9 மணிக்கு வாக்களிக்க வந்தார். வாக்காளர் பட்டியலை பரிசோதித்த வாக்குச்சாவடி அலுவலர், முத்துலெட்சுமி என்ற பெயரிலான வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டது என்றார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த முத்துலெட்சுமி, "தான் ஓட்டுப்போட இப்போதுதானே வருகிறேன். நான்தான் உண்மையான வாக்காளர். அப்படியானால், எனது ஓட்டை பதிவு செய்த நபர் யார்? " என தெரிந்து கொள்ள வேண்டுமென கேட்க, ஆவண பதிவேட்டில் ஆய்வு செய்யப்பட்டது.
2 ஓட்டுகள் போட்ட தி.மு.க. பெண்வேட்பாளர்
ஆய்வில் அவரது வாக்கினை போட்டு சென்றது மஞ்சுளாதேவி என்பது தெரியவந்தது. அவர் யார்? என ஆராய்ந்தபோது, 56-வது வார்டில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்தான் அவர்எனகண்டறியப்பட்டது. மேலும் மஞ்சுளாதேவி, அதே பள்ளி மையத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண்: 646-ல் தனது ஓட்டை காலை 7.10 மணியளவில் போட்டுள்ளதும் கண்டறியப்பட்டது.அதாவது, தி.மு.க. வேட்பாளர் மஞ்சுளாதேவி, முத்துலெட்சுமி என்ற வாக்காளரின் பெயரிலான வாக்கினை, தனது பெயரிலேயே பதிவு செய்ததால் அவர் சிக்கினார்.
இதர வேட்பாளர்கள் போர்க்கொடி
இதைக் கேள்விப்பட்ட அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜனதா உள்ளிட்ட இதர வேட்பாளர்கள் அனைவரும் வாக்குச்சாவடி அருகே அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேலும்கோ-அபிஷேகபுரம் கோட்ட அ.தி.மு.க. முன்னாள் தலைவர் ஞானசேகர், கருமண்டபம்ஊர்த்தலைவர்ஜெயபால்உள்ளிட்டவர்களும், திருச்சி-திண்டுக்கல் சாலையில் திரண்டு கூச்சல் எழுப்பினர். உடனடியாக, இங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் வர வேண்டும் என்றும், இரட்டை வாக்குகள் பதிவு செய்திட வாக்குச்சாவடி அலுவலர்கள் துணை போய் உள்ளனர் எனவும் உரக்க கத்தினர்.
தகுதி நீக்கம் செய்யக்கோரிக்கை
அவர்களுடன் ஓட்டுப்போடும் வாய்ப்பை இழந்த உண்மையான வாக்காளரான முத்துலெட்சுமியும் சேர்ந்து போராடினார். பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலரான கோ-அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையர் செல்வபாலாஜி, கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகளிடம் தனித்தனியாக புகார் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து 2 ஓட்டுகள் போட்ட தி.மு.க. வேட்பாளர் மஞ்சுளாதேவியை தகுதி நீக்கம் செய்வதுடன், உரிய மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தனர். அதே வேளையில் உண்மையான வாக்காளரான முத்துலெட்சுமிக்கு, ஆய்வுக்குரிய ஓட்டாக மின்னணு எந்திரத்தில் அல்லாமல், வாக்குச்சீட்டில் பதிவு செய்யும் "டெண்டர்" ஓட்டு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெண் வேட்பாளர் ஒருவர், 2 ஓட்டுகளை பதிவு செய்தது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கு சேகரித்ததால் மோதல்
இதேபோல் திருச்சி மாநகரில்உள்ளவண்ணார்பேட்டை காஜாமலை காலனி உள்ளிட்ட பல இடங்களில் வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் வாக்கு கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார் அங்கு சமரசம் செய்து வைத்தனர்.
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே செங்குளம் காலனி மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடி அருகே வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.
இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதமாகி மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. உடனே அங்கு போலீசார் குவிக்கப்பட்டு அனைவரையும் துரத்தினர்.