காரில் கடத்தி பா.ஜனதா நிர்வாகி கொலை; பரபரப்பு தகவல்கள்
திண்டுக்கல் பா.ஜனதா நிர்வாகியை கொலை செய்து உடலை நெல்லை கால்வாயில் வீசிச்சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை:
திண்டுக்கல் பா.ஜனதா நிர்வாகியை கொலை செய்து உடலை நெல்லை கால்வாயில் வீசிச்சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பா.ஜனதா நிர்வாகி
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் கண்டித்தான்குளம் பகுதியில் உள்ள வெள்ளநீர் கால்வாயில் நேற்று முன்தினம் உடல் அழுகிய நிலையில் ஆண் பிணம் மிதந்தது. அவரது உடலில் கல் கட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் துப்பு துலங்கியது.
போலீசாரின் விசாரணையில், இறந்தவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதைமங்கலம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 41) என்பது தெரியவந்தது. பா.ஜ.க. மாவட்ட வர்த்தக அணி துணை தலைவரான இவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கடந்த 15-ந்தேதி ஈரோட்டுக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் அவர் திரும்பி வராமல் மாயமானதால், ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் மனைவி புகார் அளித்து இருந்தார்.
காரில் கடத்தி கொலை
இந்த நிலையில் செந்தில்குமாரை கடத்தி சென்ற மர்ம கும்பல் அவரை கழுத்தை நெரித்தும், அடித்தும் கொலை செய்து, உடலில் கல்லைக் கட்டி, முன்னீர்பள்ளம் கண்டித்தான்குளம் வெள்ளநீர் கால்வாயில் வீசியது தெரியவந்தது.
இறந்த செந்தில்குமாரின் உடலை அவருடைய மனைவி, குடும்பத்தினர் பார்த்து அடையாளம் காண்பித்து உறுதிப்படுத்தினர்.
மேலும், போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
முகநூலில் பழகிய பெண்
கடந்த 2 ஆண்டுகளாக செந்தில்குமாரும், பழனியைச் சேர்ந்த இளம்பெண்ணும் முகநூல் மூலமாக பழகி வந்தனர். அந்த பெண்ணை செந்தில்குமார் அடிக்கடி சந்தித்தார். இதனை பெண்ணின் உறவினர்கள் கண்டித்தனர்.
கடந்த 14-ந்தேதி செந்தில்குமாரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு 7 பேரை வாடகை காரில் அழைத்து செல்ல வேண்டும் என்று கூறினார். இதையடுத்து ஈரோட்டுக்கு சென்ற செந்தில்குமார், அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த 7 பேரையும் தனது சொகுசு காரில் அழைத்து கொண்டு நெல்லைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது செந்தில்குமார் தன்னுடைய நண்பரான சீனிவாசனையும் காரில் அழைத்து சென்றார்.
நண்பரை இறக்கி விட்டு...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சென்றபோது, காரில் இருந்த மர்மநபர்கள் 7 பேரும் அரிவாளைக் காட்டி மிரட்டி சீனிவாசனை காரில் இருந்து கீழே இறக்கி விட்டனர். பின்னர் செந்தில்குமாரை காருடன் கடத்தி சென்றனர்.
தொடர்ந்து செந்தில்குமாைர கழுத்தை நெரித்தும் அடித்தும் கொலை செய்த மர்மநபர்கள், அவரது உடலில் கல்லை கட்டி முன்னீர்பள்ளம் கண்டித்தான்குளம் பகுதியில் உள்ள வெள்ளநீர் கால்வாயில் வீசிச் சென்றனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
3 பேரிடம் விசாரணை
செந்தில்குமாருடன் பழகிய பெண்ணின் உறவினர்கள் செந்தில்குமாரை கொலை செய்தனரா? அல்லது கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டினரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக ஈரோடு வடக்கு போலீசாரும் நெல்லை வந்து விசாரணை மேற்கொண்டனர். செந்தில்குமாரின் நண்பர் சீனிவாசனிடம் விசாரித்தனர். மேலும் 3 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். பா.ஜனதா நிர்வாகி காரில் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.