தஞ்சை மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
தஞ்சை மாவட்டத்தில் 2 மாநகராட்சிகள், 2 நகராட்சிகள், 20 பேரூராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் 2 மாநகராட்சிகள், 2 நகராட்சிகள், 20 பேரூராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள், பெருமகளூர், சுவாமிமலை, திருக்காட்டுப்பள்ளி, ஆடுதுறை, அம்மாப்பேட்டை, மெலட்டூர், ஒரத்தநாடு, பாபநாசம், பேராவூரணி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், திருபுவனம், திருவையாறு, திருவிடைமருதூர், வல்லம், வேப்பத்தூர், அய்யம்பேட்டை, சோழபுரம், மதுக்கூர், மேலத்திருப்பூந்துருத்தி ஆகிய 20 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
ெமாத்தம் 456 கவுன்சிலர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதற்காக 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. தஞ்சை மாநகராட்சி பகுதியில் மட்டும் 196 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
வாக்குப்பதிவு தொடங்கியது முதல் ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஒவ்வொருவராக வந்தனர். சில வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஆட்கள் வரவில்லை. பின்னர் நேரம், ஆக, ஆக வாக்காளர்கள் அதிக அளவில் வரத்தொடங்கினர். குறிப்பாக கரந்தை, வடக்கு வாசல், பள்ளியக்ரஹாரம் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதர வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் அதிக அளவில் வரத்தொடங்கினர். நேற்று காலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக லேசான தூறலுடன் மழை பெய்து வந்தாலும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இதனால் விறு, விறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.