அரை நிர்வாண கோலத்தில் கோஷமிட்டவரால் பரபரப்பு
சிவகங்கை வாக்குச்சாவடி முன்பு அரை நிர்வாண கோலத்தில் கோஷமிட்டவரால் பரபரப்பு
சிவகங்கை
சிவகங்கை செந்தமிழ் நகரை சேர்ந்தவர் மகேஷ்பாபு. இவர் தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் ்நகைமதிப்பீட்டாளர் சங்கத்தின், மாநில செயல்தலைவராக இருந்து வருகிறார். இவர் நேற்று சிவகங்கை மருதுபாண்டியர்நகர் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது ஓட்டுப்போட வந்தார்.
வாக்குச்சாவடி வாசலுக்கு வந்தவுடன் அவர் திடீரென தனது ஆடைகளை களைந்து டவுசர் மட்டும் அணிந்து கொண்டு வாக்களிக்க சென்றார். மேலும் நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரப்படுத்த கோரிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கழுத்தில் மாட்டியபடியும்,, கொரோனா காலத்தில் பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் கோஷமிட்டார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல முற்பட்டனர். அப்போது சிலர் அவரின் வாக்களிக்கும் உரிமையை தடுக்காதீர்கள் என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த பறக்கும்படை தாசில்தார் மைலாவதி அவரை சமாதானப்படுத்தி ஆடைகளை அணிந்து கொண்டு வாக்குச்சாவடிக்குள் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து ஆடைகளை அணிந்து சென்று ஓட்டுப்போட்டார்.