போராட்டம் நடத்தி 5 பேர் வாக்களித்தனர்
பரமக்குடியில் கள்ள ஓட்டுகள் பதிவானதால் போராட்டம் நடத்தி 5 பேர் வாக்களித்தனர்.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி தேர்தல் நேற்று நடந்தது. இதையொட்டி 36-வது வார்டுக்கான வாக்குப்பதிவு சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடந்தது.
அப்போது காதர் மைதீன் என்று கூறி கள்ள ஓட்டு போட வாலிபர் ஒருவர் வந்தார். அங்கிருந்த பூத் முகவர்கள் இவர் காதர் மைதீன் இல்லை என எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அவரது அடையாள அட்டையை வாங்கி சோதனை செய்தனர். அதில் அவரது பெயர் வேறு என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக அங்கு வந்து அந்த வாலிபரை கண்டித்து அனுப்பி வைத்தனர்.
அதேபோல் 28-வது வார்டு சிவானந்தபுரம் வாக்குச்சாவடி மையத்தில் நிஷா என்ற பெண்ணும், 30-வது வார்டில் செல்வி, முனியம்மாள், உமாமகேஸ்வரி, கோவிந்தராஜ் ஆகிய வாக்காளர்கள் வாக்களிக்க வந்தனர். அப்போது அவர்களது அடையாள அட்டையை சரிபார்த்தபோது அவர்களின் வாக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனே அவர்கள் 5 பேரும் நாங்கள் ஓட்டு போடாமலே எங்கள் வாக்கு எப்படி பதிவானது? ஏன் கள்ள ஓட்டு போட அனுமதித்தீர்கள் ? எங்களுக்கு வாக்களிக்க அனுமதி தரவேண்டும் என கூறி வாக்குச்சாவடி முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசாரும், அதிகாரிகளும் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு இது எங்கள் ஓட்டு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு சேலஞ்ச் ஓட்டு போடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன் பின்பு அந்த 5 பேரும் வாக்களித்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.