தேர்தல் நடத்தும் அலுவலரை கண்டித்து பா.ஜனதாவினர் தர்ணா
பதிவான வாக்குகள் குறித்து முறையாக தெரிவிக்காத தேர்தல் நடத்தும் அலுவலரை கண்டித்து பா.ஜனதாவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
குளித்தலை,
குளித்தலை நகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் விண்ணப்ப எண் 23-ல் அந்த வார்டு பகுதியில் எத்தனை வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள் என்பது குறித்து விவரம் குறித்து எதுவும் பூர்த்தி செய்யப்படாமல் காலியான விண்ணப்பத்தில் அந்த வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர் கையெழுத்திட்டு விண்ணப்பத்தினை வேட்பாளர்களிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டிக்கும் வகையில் பா.ஜனதாவினர் குளித்தலை நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான சுப்புராம், குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீராம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து பா.ஜனதா மாவட்ட துணை தலைவர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் நடத்தும் அலுவலர் 20-வது வார்டு பகுதியில் பதிவான வாக்குகள் எத்தனை என்பது குறித்து தற்போது குறித்து கொடுத்துள்ளார். அவர் கொடுத்த எண்ணிக்கையும், வாக்கு எண்ணிக்கையின் போது எண்ணப்படும் வாக்குகளின் எண்ணிக்கையும் சரியாக இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.