வாக்குப்பதிவு எந்திரத்தில் பேட்டரி கோளாறு

பள்ளப்பட்டி நகராட்சியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பேட்டரி கோளாறு காரணமாக 1 மணி நேரம் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

Update: 2022-02-19 19:28 GMT
அரவக்குறிச்சி, 
பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் தெற்கு பள்ளி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அமைந்துள்ள பள்ளப்பட்டி நகராட்சி 26-வது வார்டுக்கான வாக்குச்சாவடியில் காலை முதலே ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். மதியம் 12 மணியளவில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பேட்டரி திடீரென பழுதானதால் 12 மணி முதல் 1 மணி வரை வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணத்தால் மாலை இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு 1 மணி நேரம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட மேட்டு மருதூரில் உள்ள நடேசன் உதவிபெறும் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் 4 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 5-வது வார்டுக்கான வாக்குச்சாவடியில் உள்ள கட்டுப்பாட்டு கருவியில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரியின் சார்ஜ் திடீரென குறைந்தது. இதையடுத்து, அங்கு பணியில் இருந்த அலுவலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரான ராஜகோபாலுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் அங்கு இருந்த வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் உடனடியாக கட்டுப்பாட்டு கருவியில் இருந்த சார்ஜ் குறைந்த பேட்டரியை உடனடியாக அகற்றிவிட்டு புதிய பேட்டரியை மாற்றினர். உடனடியாக பேட்டரி மாற்றப்பட்டதால் வாக்குப்பதிவில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்