தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-19 19:17 GMT
புதுக்கோட்டை

சாலையில் 8 அடி ஆழத்தில் பள்ளம் 
அரியலூர் மாவட்டம் இடையார் ஊராட்சி சூசையப்பர் பட்டணம் சாலையின் குறுக்கே வாய்க்கால் பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் 8 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த பள்ளத்தில் வாகனங்கள் சென்று சிக்கிக்கொள்ள கூடாது என்பதற்காக மரக்கிளைகளை போட்டு வைத்துள்ளது. மேலும் பாலம் சிதிலமடைந்து காணப்படுகிறது. கனரக வாகனங்கள் செல்லும்போது இந்த பாலம் உடையும் அபாயம் உள்ளது. மேலும் காலை, மாலை நேரங்களில் இந்த சாலையின் வழியாகத்தான் பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளி வாகனங்கள் செல்லும்போது பாலம் உடைந்து விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், சூசையப்பர் பட்டணம், அரியலூர். 

அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் பகுதியில் உள்ள  மலைக்கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் பேரிகார்டு வைத்தனர். இந்தநிலையில் அங்கு வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டு எடுக்கப்பட்டதால் அப்பகுதியில் வாகனங்கள் மீண்டும் அதிவேகத்தில் செல்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கரன், திருவெறும்பூர், திருச்சி.

சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள ஆதனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கட்டணாம்பட்டி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித் துவருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கட்டணாம்பட்டி, திருச்சி. 

கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சியில் உள்ள முஸ்லிம் தெரு அம்மா குளம் தென்கரையில் சுமார் 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப்பகுதியில் வடபுறத்தில் குளம் இருப்பதால் மழைக் காலங்களில் குளம் நிரம்பியவுடன் இந்த குடியிருப்புப் பகுதிகள் மழை நீரால் சூழப்படுகிறது. மேலும் இந்தப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறுகின்ற கழிவுநீர் வெளியேற முறையான வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்புகளின் அருகிலேயே கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாய நிலையில் இந்தப்பகுதி மக்கள் குடியிருந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தக் குடியிருப்புகளில் இருந்து வெளியேறுகின்ற கழிவுநீரை முறையாக கழிவுநீர் வாய்க்கால் மூலம் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை. 

கழிவுநீர் கால்வாயை செடி கொடிகள் ஆக்கிரமிப்பு 
கரூர் மாவட்டம், புகழூர் ரெயில்வே கேட்டில் இருந்து நடையனூர் செல்லும் சாலையில் உள்ள பேச்சிப்பாறை வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாயில் ஏராளமான செடி கொடிகள் முளைத்துள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே கழிவுநீர் கால்வாயில் உள்ள செடிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பன்னீர்செல்வம்,  பேச்சிப்பாறை, கரூர்.

பயனற்ற நீர்த்தேக்க தொட்டி 
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா கோத்திராப்பட்டி ஒன்றியம், தெற்குப்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி கடந்த 6 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தெற்குப்பட்டி, புதுக்கோட்டை. 



மேலும் செய்திகள்