நிலக்கடலை சாகுபடியில் மகசூலை அதிகரிப்பது எப்படி
நிலக்கடலை சாகுபடியில் மகசூலை அதிகரிப்பது எப்படி
நீடாமங்கலம்;
நிலக்கடலை சாகுபடியில் மகசூலை அதிகரிப்பது எப்படி என்று நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் விளக்கம் அளித்துள்ளது.
பயிர் ஊக்கி செயல் விளக்கம்
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் வட்டம், எடமேலையூர் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நிலக்கடலை சாகுபடியில் மகசூலை அதிகரிக்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நிலக்கடலை ரிச்(பயிர் ஊக்கி) குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிலக்கடலையில் பூக்கும் திறனை அதிகரித்து மகசூலை அதிகரிக்கச் செய்யும் நிலக்கடலை ரிச்சை, நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
நுண்ணூட்ட சத்து
நீர்வள நிலவள திட்ட விஞ்ஞானி செல்வமுருகன் பேசுகையில்
நிலக்கடலை ரிச்சில் நிலக்கடலைக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் நிறைந்து காணப்படுகிறது. நிலக்கடலை ரிச்சானது இலை வழியாக அளிக்கப்படும் போது அதில் உள்ள அனைத்து நுண்ணூட்ட சத்துக்களும், பயிர் வளர்ச்சி ஊக்கிகளும் மிக எளிதில் விரைவாக நிலக்கடலை பயிருக்கு கிடைக்கப் பெற்று பூக்கள் உற்பத்தி அதிகரிப்பதோடு, பூக்கள் உதிர்தல் தடுக்கப்பட்டு அவைகள் அனைத்தும் முழுமைபெற்ற முழு கடலைகளாக மாற்றப்படுகின்றன. இதனால் முழுமைபெறாத கடலைகள் வெகுவாக குறைந்து மகசூல் 15 சதவீதம் வரை அதிகரிக்கிறது.
இடு பொருட்கள்
இந்த நிலக்கடலை ரிச்சியை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் எடுத்து 200 லிட்டர் நீரில் கரைத்து தேவையான அளவு ஒட்டும் திரவத்தை சேர்த்து கைத்தெளிப்பான் கொண்டு இலை வழியாக, பூக்கும் பருவத்தில் ஒரு முறையும், காய் பிடிக்கும் பருவத்தில் ஒரு முறையுமாக இரு பருவங்களிலும் தெளிக்க வேண்டும் என கூறினார். மேலும் இதற்கான செயல் விளக்கத்தையும் விவசாயிகளுக்கு செய்து காட்டினார். நிகழ்ச்சியில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மானியமாக விதைகள் பெற்று நிலக்கடலை சாகுபடி செய்திருந்த விவசாயிகளுக்கு நிலக்கடலை ரிச், உயிர் எதிரி கொல்லிகள் மற்றும் இதர இடு பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நீர்வள நிலவள திட்டத்தின் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர்கள் சுரேஷ் மற்றும் குகன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் 25 விவசாயிகள் கலந்து கொண்டனர்.