திருப்பத்தூர் மாவட்டத்தில் 69 சதவீத வாக்குப்பதிவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 69சதவீத வாக்குகள் பதிவாகின.
திருப்பத்தூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 69சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 4 நகராட்சிகளில் உள்ள 126 வார்டுகளுக்கும், ஆலங்காயம், உதயேந்திரம், நாட்டறம்பள்ளி, ஆகிய 3 பேரூராட்சிகளில் உள்ள 45 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.
காலை 7 மணி முதல் மாலை வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 8 சதவீத வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 16.67 சதவீத வாக்குகளும், 1 மணி நிலவரப்டி 37.56 சதவீத வாக்குகளும், 3 மணி நிலவரப்படி 49.21 சதவீத வாக்குகளும், 5 மணி நிலவரப்படி 66.47 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது.
மாலை 5 மணிக்கு மேல் வாக்களிக்க ஏராளமானோர் காத்து இருந்தனர். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.
69 சதவீதம்
ஆம்பூர் நகராட்சியில் 65 சதவீதமும், வாணியம்பாடி நகராட்சியில் 66 சதவீதமும், திருப்பத்தூர் நகராட்சியில் 72 சதவீதமும், ஜோலார்பேட்டை நகராட்சியில் 77 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தது.
ஆலங்காயம் பேரூராட்சியில் 65 சதவீதமும், உதயேந்திரம் பேரூராட்சியில் 78 சதவீதமும், நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 85 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தது.
மாவட்டத்தில் 4 நகராட்சி மற்றும் 3 பேரூராட்சிகளில் மொத்தம் 69 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
வாக்குபதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது.
பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்ட அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.