நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 72.24 சதவீத வாக்குப்பதிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 72.24 சதவீதம் வாக்குகள் பதிவாகின.;

Update: 2022-02-19 18:27 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 72.24 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம், வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 6 நகராட்சிகள், அம்மூர், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி, தக்கோலம், விளாப்பாக்கம், திமிரி, கலவை ஆகிய 8 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது.

நகராட்சி பகுதியில் 168 வார்டுகள், பேரூராட்சி பகுதியில் 120 வார்டுகள் என மொத்தம் 288 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர். 

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டது. 

பெரும்பாலான இடங்களில் காலையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு நேரம் செல்ல செல்ல விறுவிறுப்பு அடைந்தது. 

எந்திரங்கள் பழுது

ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள் பழுது ஏற்பட்டது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, எந்திரங்கள் சரி பார்க்கப்பட்டது. 

பின்னர் தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது. சில இடங்களில் அரசியல் கட்சியினர் இடையே சிறுசிறு தகராறுகள், வாக்குவாதங்கள் ஏற்பட்டது. 

அதனை தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து, பார்வையிட்டனர்.

72.24 சதவீதம் வாக்குப்பதிவு

மாவட்டம் முழுவதிலும் உள்ள 3 லட்சத்து 34 ஆயிரத்து 45 வாக்காளர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 325 பேர் வாக்களித்திருந்தனர். இது 72.24 சதவீதமாகும்.

அரக்கோணம் நகராட்சியில் 62.20 சதவீதம், ஆற்காடு நகராட்சியில் 72.89 சதவீதம், மேல்விஷாரம் நகராட்சியில் 64.95 சதவீதம், ராணிப்பேட்டை நகராட்சியில் 73.39 சதவீதம், சோளிங்கர் நகராட்சியில் 71.73 சதவீதம், வாலாஜா நகராட்சியில் 76.57 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

அதேபோல், அம்மூர் பேரூராட்சியில் 83.91 சதவீதம், கலவை பேரூராட்சியில் 82.24 சதவீதம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 79.16 சதவீதம், நெமிலி பேரூராட்சியில் 81.64 சதவீதம், தக்கோலம் பேரூராட்சியில் 82.12 சதவீதம், திமிரி பேரூராட்சியில் 83.09 சதவீதம், விளாப்பாக்கம் பேரூராட்சியில் 85.95 சதவீதம், பனப்பாக்கம் பேரூராட்சியில் 80.44 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

கலெக்டர் ஆய்வு

அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கான 74 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகின்றன.

இந்த வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பெட்டிகள் வைக்கும் பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணும் அறைகளை மாவட்ட தேர்தல் அலுவலரும்  கலெக்டருமான பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அரக்கோணம் நகராட்சி ஆணையர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் லதா உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்