அ.ம.மு.க. வேட்பாளர் சட்டை கிழிப்பு
தேனி வாக்குச்சாவடியில் ஏற்பட்ட மோதலில் அ.ம.மு.க. வேட்பாளர் சட்டை கிழிந்தது.
தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சி 1-வது வார்டுக்கான வாக்குப்பதிவு மையம் பொம்மையகவுண்டன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டது. நேற்று மாலையில் இங்கு வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தது.
அப்போது தி.மு.க. வேட்பாளர் விஜயன் மற்றும் சிலர் வாக்குச்சாவடிக்கு வந்தனர். தி.மு.க.வினர் வாக்குச்சாவடிக்குள் வாக்கு சேகரிப்பதாகவும், அவர்களை வெளியேற்றுமாறும் அ.ம.மு.க. வேட்பாளர் பால்பாண்டியன் தெரிவித்தார். இதனால் அவருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் பால்பாண்டியனின் சட்டை கிழிக்கப்பட்டது.
இதையடுத்து அவர், தனது ஆதரவாளர்கள் சிலருடன் புகார் கொடுக்க அல்லிநகரம் போலீஸ் நிலையத்துக்கு புறப்பட்டார். போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது அவர்களை சிலர் வழிமறித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார், அவர்களை விலக்கி விட்டனர். இந்த மோதலில் தி.மு.க. தரப்பில் ஒருவரும், அ.ம.மு.க. தரப்பில் 3 பேரும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.