மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு
கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடந்தது.
இந்நிலையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட செம்மண்டலம் மகளிர் கல்லூரியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்காக வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதற்கிடையே வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து பெல் நிறுவன ஊழியர்கள், பழுதை சரி செய்த பிறகு 15 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடந்தது.
இதேபோல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் வில்வநகர் காந்திநகர் வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு தொடங்க 15 நிமிடம் தாமதமானது.
தாமதம்
விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு கொளஞ்சியப்பர் கல்லூரியில் வாக்குப்பதிவு தொடங்கிய உடனே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னர் ஊழியர்கள் எந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்ததும், சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கி நடந்தது. இதேபோல் விருத்தாசலம் நகராட்சி 6-வது வார்டு புதுப்பேட்டை பள்ளியில் 30 நிமிடமும், 21-வது வார்டு சக்திநகரில் 30 நிமிடமும் தாமதமாக வாக்குப்பதிவுகள் தொடங்கின. இதேபோல் மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கி நடந்தது.
வாக்குப்பதிவு நிறுத்தம்
மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 5-வது வார்டுக்கான வாக்குப்பதிவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த நிலையில் காலை 10.45 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுதானது. அதனை அதிகாரிகள் சரிசெய்ய முயன்றனர். இருப்பினும் முடியவில்லை. இதையடுத்து மாற்று வாக்குப்பதிவு எந்திரம் கொண்டுவரப்பட்டு, மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.