பங்குனி உத்திர விழாவையொட்டி பூத நெல் திருவிழா
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பூத நெல் திருவிழா நடந்தது.
திருவாரூர்;
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பூத நெல் திருவிழா நடந்தது.
பங்குனி உத்திர திருவிழா
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் முக்கிய விழாவான பங்குனி உத்திர திருவிழாவை சைவ சமய நாயன்மார்களில் முக்கியமானவர்களான சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோர் நடத்தியதாக கூறப்படுகிறது. திருவிழாவை நடத்த திருநாவுக்கரசர் நிதியை திரட்டி திருவிழா நடத்த, திருவிழாவுக்கு வரும் சிவனடியார்களுக்கும், பக்தர்களுக்கும் உணவளிக்க சுந்தரர் உதவி கேட்டு இறைவனிடம் வேண்டினார்.
இதை ஏற்று திருக்குவளை அருகே உள்ள குண்டையூர் கிழாரிடம் இருந்து நெல்லை பூதகணங்கள் பெற்று, திருவாரூரில் உள்ள சுந்தரர், பரவைநாச்சியார் மாளிகையில் நெல்லை கொடுத்தாக வரலாறு கூறுகிறது. இதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரவிழா கொடியேற்ற விழா முதல் நாளில் பூத நெல் திருவிழா கொண்டாடப்படுகிறது.
பூத நெல் திருவிழா
அதன்படி நேற்று பூத நெல் திருவிழா நடந்தது. விழாவையொட்டி பரவை நாச்சியார் கோவிலில் இருந்து பரவை நாச்சியார்-சுந்தரர் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் இருந்து செண்டை மேளங்கள் முழங்க பல்லக்கு வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. முன்னதாக பூதங்கள் நெல் கொண்டு வந்ததை நினைவு கூர்ந்திட பூத கணங்கள் முகங்கள் வேடமணிந்து சிவபக்தர்கள் நடனமாடி வீதிஉலா வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிவபக்தர்கள் செய்து இருந்தனர். இதன் தொடர்ச்சியாக தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.