வாக்குப்பதிவு எந்திரங்கள் உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திடீரென கோளாறு ஏற்பட்ட, பழுதடைந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் உடனுக்குடன் சரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
வேலூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திடீரென கோளாறு ஏற்பட்ட, பழுதடைந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் உடனுக்குடன் சரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
கலெக்டர் வாக்கு செலுத்தினார்
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் பலர் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான குமாரவேல்பாண்டியன் தனது மனைவியுடன் வேலூர் அல்லாபுரம் எழில்நகரில் உள்ள தனியார் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு 10 மணியளவில் வந்தார்.
கலெக்டரும், அவருடைய மனைவியும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வாக்காளர்களுடன் வரிசையில் நின்று அடையாள அட்டை, பூத்சிலிப் ஆகியவற்றை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் காண்பித்து வாக்கு செலுத்தினர்.
பின்னர் கலெக்டர் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு பதிவான வாக்குகள் குறித்து கேட்டறிந்தார்.
எந்திரங்கள் சரி செய்ய ஏற்பாடு
பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இதுவரை அமைதியாக நடைபெற்று வருகிறது.
ஓரிரு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது மற்றும் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளன. அவை பெல் என்ஜினீயர்கள் மூலம் உடனுக்குடன் சரிசெய்ய உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மண்டல தேர்தல் அலுவலர்கள் கண்காணித்து வருகிறார்கள். சில வாக்குச்சாவடியில் சிறிதுநேரம் வாக்குப்பதிவு தடைப்பட்டிருக்கலாம்.
மாலை 5 மணிக்கு பின்னர் வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதனை காண்பித்து அவர்கள் வாக்களிக்கலாம்.
அதனால் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்காளர்கள் வாக்குப்பதிவில் அவசரம் காட்ட தேவையில்லை. மாவட்டம் முழுவதும் நடக்கும் வாக்குப்பதிவு குறித்து அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்ய உள்ளேன்.
மாலை 5 மணிக்கு பின்னர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று அறிகுறி காணப்படும் நபர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஆய்வின்போது வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, தாசில்தார் செந்தில் மற்றும் பலர் உடனிருந்தனர்.