உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் சிதம்பரத்தில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
சிதம்பரம்,
சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது மனைவி ஜான்சிராணியுடன் வந்து வாக்களித்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. நடத்தாமல் இருந்தது. அமைச்சர்களையும், அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு உள்ளாட்சியில் கொள்ளை ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது.
வேலைவாய்ப்பு திட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் நகரங்களில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை மேம்பாடு போன்ற எந்த திட்டங்களும் சரிவர செயல்படுத்தப்படவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நகர்ப்புற வளர்ச்சிக்காக ஒரு உள்ளாட்சி ஒருங்கிணைந்த சட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் செயல்படுத்த வேண்டும்.
கேரளாவில் உள்ளதைப்போல உள்ளாட்சிகளுக்கு அதிக நிதியும், அதிக அதிகாரமும் வழங்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதை அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.