நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக அமைதியாக நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டத்தில் 205 கவுன்சிலர் பதவிகளுக்கு 920 வேட்பா ளர்கள் போட்டியிட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக அமைதியாக நடைபெற்றது.
ராமநாதபுரம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 205 கவுன்சிலர் பதவிகளுக்கு 920 வேட்பா ளர்கள் போட்டியிட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக அமைதியாக நடைபெற்றது.
4 நகராட்சிகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக் குடி, ராமேசுவரம், கீழக்கரை ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, சாயல்குடி, கமுதி, முதுகுளத்தூர், அபிராமம் ஆகிய 7 பேரூராட்சிகளுக்கு நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 111 நகராட்சி கவுன்சிலர் மற்றும் 108 பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 219 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் ராமநாதபுரம் நகராட்சியில் 2 கவுன்சிலர்கள், கமுதி பேரூராட்சியில் 11 கவுன்சிலர்கள், அபிராமம் பேரூராட்சியில் 1 கவுன்சிலர் ஏற்கனவே போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.
வாக்குப்பதிவு
மீதம் உள்ள 205 உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 109 நகராட்சி கவுன்சிலர் பதவி களுக்கு 527 வேட்பாளர்களும், 96 பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 393 வேட்பாளர்களும் என மொத்தம் 920 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இந்த தேர்தலில் ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு கண்ட்ரோல் யூனிட், ஒரு பேலட் யூனிட் என மொத்தம் 327 வாக்குச் சாவடிகளுக்கு 654 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக நகராட்சிகளை பொறுத்த வரை ராமநாதபுரத்தில் 60 வாக்குச்சாவடிகளும், பரமக் குடியில் 83, ராமேசுவரத்தில் 42, கீழக்கரையில் 43 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
கண்காணிப்பு
பேரூராட்சிகளை பொறுத்தவரை அபிராமத்தில் 14, கமுதி யில் 4, மண்டபத்தில் 18, முதுகுளத்தூரில் 15, ஆர்.எஸ். மங்கலத்தில் 15, சாயல்குடியில் 15, தொண்டியில் 18 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அனைத்து வாக்கு சாவடிகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டதுடன், மிகவும் பதற்றமான வாக்கு சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தூரத்திற்குள் வாக்காளர்கள் தவிர வேறு நபர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று வாக்களித்தனர். ஆண்கள்,பெண்கள் தனித்தனி வரிசையில் அவரவர் வார்டுக்குரிய வாக்குச்சாவடியில் தங்களின் அடையாள அட்டைகளை காட்டி வாக்களித்தனர்.
கோளாறு
குறிப்பாக இந்த தேர்தலில் வயதானவர்கள் அதிகஅளவில் வந்து வாக்களித்ததை காண முடிந்தது. 18 வயது பூர்த்த அடைந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை ஆர்வமுடன் வந்து செலுத்தி தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். வாக்குப்பதிவு தொடங்கியதும் ராமநாதபுரம் இன்பென்ட் ஜீசஸ் பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சிறுகோளாறு ஏற்பட்டது.
வாக்குவாதம்
இந்தவார்டில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தரப்பினர் ஆதரவாளர்களுடன் வாக்குச் சாவடிக்குள் செல்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருதரப்பினரும் உள்ளே செல்லக்கூடாது என்று எச்சரித்து 100 மீட்டருக்கு அப்பால் வெளியேற்றி அமைதிப்படுத்தினர்.
மாவட்டம் முழுவதும் தேர்தல் பார்வையாளர் அஜய் யாதவ், மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சங்கர்லால் குமாவத் ஆகியோர் தனித்தனியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.