நாகையில், தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சியினர் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர்

நாகையில் வேட்பாளரை வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்காததால் தி.மு.க., மனித நேய மக்கள் கட்சியினர் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-19 17:28 GMT
நாகப்பட்டினம்:
நாகையில் வேட்பாளரை வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்காததால் தி.மு.க., மனித நேய மக்கள் கட்சியினர் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்
நாகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் 35 வார்டுகளுக்கு நேற்று உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. 
29-வது வார்ட்டில் தி.மு.க. கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜென்னத்துல்பிர்தொஸ், அவரது கணவரும், ஏஜெண்டுமான மவுலாசா ஆகியோர் நேற்று நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர்.
வாக்குச்சாவடி முற்றுகை
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், யாரும்
உள்ளே செல்லக்கூடாது எனக்கூறி, வேட்பாளரின் கணவர் மவுலாசாவின் சட்டையை பிடித்து இழுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சியினர் வாக்குச்சாவடி முன்பு
திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த தி.மு.க. மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தலைவருமான கவுதமன் மற்றும் கட்சியினர், தேர்தல் நடத்தும் அதிகாரியான நகராட்சி கமிஷனர் ஸ்ரீதேவியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 அப்போது வாக்குச்சாவடிக்குள் சென்று பொதுமக்களிடம் ஓட்டு சேகரிக்கக்கூடாது, ஓட்டுப்பதிவு உள்ளிட்டவைகள் குறித்து பார்வையிடலாம் என்றுதேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக முழுவதும் இதேநிலை இருக்கும்போது, இங்கு மட்டும் வேட்பாளர், ஏஜெண்ட்டுகளை உள்ளே விடாமல் சட்டையை பிடித்து இழுத்து சென்றது கண்டிக்கத்தது. 
வாக்குவாதம்
மேலும் மாவட்ட தேர்தல் துறையால் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையையும் காண்பித்து அனுமதிக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். 
இதில்  வேட்பாளர் மற்றும் ஏஜெண்டை அனுமதிக்கலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அங்கிருந்து கலைந்துச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்