இருகால்கள் முறிந்த நிலையிலும் வாக்களித்த பெண் தொழிலாளி
தேனி அல்லிநகரம் வாக்குச்சாவடியில் இருகால்கள் முறிந்த நிலையிலும் பெண் தொழிலாளி வாக்களித்தார்.
தேனி:
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் நேற்று காலையில் வாக்களிக்க மக்கள் குவிந்தனர். அப்போது அல்லிநகரம் தியாகராயர் தெருவை சேர்ந்த போதுமணி என்ற பெண் இரு கால்களிலும் கட்டுபோடப்பட்ட நிலையில், சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.
வாக்குச்சாவடி வரை ஆட்டோவில் வந்த அவர், வாக்குச்சாவடிக்குள் தன்னார்வலர்கள் உதவியுடன் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார்.
வாக்களித்த பின்பு போதுமணியிடம் கேட்டபோது, "தேனியில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை பார்த்து வந்தேன். கடந்த 1½ மாதத்துக்கு முன்பு நூற்பாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எந்திரத்தில் சிக்கி எனது 2 கால்களும் முறிந்தன.
இரு கால்களிலும் கட்டு போடப்பட்டு வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறேன். தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று விரும்பினேன். இதனால், எங்கள் தெருவை சேர்ந்த இளைஞர்கள் என்னை வாக்குச்சாவடிக்கு பத்திரமாக அழைத்து வந்தனர். எனது வாக்கை பதிவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.