பரமத்திவேலூரில் வார்டு மறுவரையறையை கண்டித்து பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

பரமத்திவேலூரில் வார்டு மறுவரையறையை கண்டித்து பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

Update: 2022-02-19 17:11 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே வார்டு மறுவரையறையை கண்டித்து பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வார்டு மறுவரையறை
பரமத்திவேலூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வார்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வார்டு மறுவரையறை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பேரூராட்சியின் 3-வது வார்டு பகுதியில் இருந்த கோவில்காடு, ராஜா நகர் பகுதியை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஒழுகூர்பட்டி 2-வது வார்டுடன் இணைத்து மாற்றம் செய்யப்பட்டனர். 
இந்த நிலையில் ஒழுகூர்பட்டிக்கும், குப்புச்சிபாளையம் பகுதி, கோவில் காடு மற்றும் ராஜா நகர் பகுதிக்கு இடையே சுமார் 2 கி.மீட்டர் தூரம் இருப்பதால் ஒழுகூர்பட்டிக்கு அருகில் உள்ள பகுதியை 2-வது வார்டுடன் இணைத்ததை விடுவிக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து கோரிக்கை விடுத்தனர். இதனை ஆய்வு செய்த பேரூராட்சி உதவி இயக்குனர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். ஆனால் மறுசீரமைப்பு முடிவுகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளில் கோவில் காடு மற்றும் ராஜா நகர் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியை ஒழுகூர்பட்டியில் இருந்து விடுவித்து அருகில் உள்ள 5-வது வார்டுடன் இணைக்க கோரி கையில் பதாகைகள் ஏந்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து, கருப்பு கொடி ஏந்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து ‌கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்