தேன்கனிக்கோட்டையில் மின்னணு எந்திரம் பழுதால் வாக்குப்பதிவு நிறுத்தம்-1½ மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த வாக்காளர்கள்
தேன்கனிக்கோட்டையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் பழுதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் மாற்று எந்திரம் பொருத்தப்பட்டு 1½ மணி நேரத்திற்கு பிறகு வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் பழுதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் மாற்று எந்திரம் பொருத்தப்பட்டு 1½ மணி நேரத்திற்கு பிறகு வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்
தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட ஆசாத் தெருவில் ஊராட்சி ஒன்றிய அரசு உருது நடுநிலைப்பள்ளியில் 9-வது வார்டு பொதுமக்கள் வாக்களிக்க வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் காலை 9 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வாக்குச்சாவடி முன்பு நீண்ட நேரம் காத்திருந்தனர்.
1½ மணி நேரத்திற்கும் மேல்...
அப்போது தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் பழுதான எந்திரத்திற்கு பதில் வேறு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த மின்னணு வாக்கு எந்திரமும் செயல்படவில்லை. இதையடுத்து 3-வதாக ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கொண்டு வந்து செயல் அலுவலர் மஞ்சுநாத், துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா மற்றும் அதிகாரிகள் பொருத்தினர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அந்த வாக்கு எந்திரத்தில் வாக்களித்தனர். இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் சுமார் 1½ மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே காத்திருந்து வாக்களிக்கும் நிலை ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி நகராட்சி தூய பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 16-வது வார்டுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணி அளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. நீண்ட நேரமாக அதை சரி செய்ய முயன்றும், சரி செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து 40 நிமிடங்களுக்கு பிறகு வேறு எந்திரம் பொருத்தப்பட்டு ஓட்டுப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.