உத்தனப்பள்ளி அருகே தர்மராஜா கோவில் கும்பாபிஷேகம்-ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி வழிபாடு

உத்தனப்பள்ளி அருகே தர்மராஜா கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி வழிபாடு செய்யப்பட்டது.

Update: 2022-02-19 16:54 GMT
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி அருகே உள்ள டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்தது. ரூ.3½ கோடியில் கோவில் கோபுரங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
நேற்று முன்தினம் கோபுர கலசங்களுக்கு திருமஞ்சனம், திருக்கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோபுர கலச ஸ்தாபனம் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு ஹோமங்கள், யாத்திரா தானம், கலச புறப்பாடு, தீர்த்த கலசங்கள் கோவில் வலம் வந்து கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்த போது பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் கோவிலின் கோபுர கலசங்கள் மீது தூவப்பட்டன. ஹெலிகாப்டர் கோவிலை சுற்றி பல முறை வட்டம் அடித்து மலர்களை கோபுரத்தின் மேல் தூவியது. இந்த கும்பாபிஷேக விழாவில் டி.கொத்தப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

மேலும் செய்திகள்