திண்டிவனத்தில் வாக்குச்சாவடி அருகே தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே தள்ளுமுள்ளு போலீசார் விரட்டி அடித்ததால் பரபரப்பு
திண்டிவனத்தில் வாக்குச்சாவடி அருகே தி.மு.க.- அ.தி.மு.க. வினர் இடையே தள்ளுமுள்ளு உருவானது. இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் திண்டிவனம் 13-வது வார்டு வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் காலை முதல் ஆர்வதுடன் வாக்களித்து வந்தனர்.
இந்த நிலையில் வாக்குச்சாவடி அருகே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தங்களது கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அங்கு வந்த வாக்காளர்களிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அங்கு தள்ளுமுள்ளு உருவானது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
விரட்டி அடித்தனர்
சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா தலைமையில் போலீசார் விரைந்து வந்து, வாக்குச்சாவடி அருகில் நின்று கொண்டிருந்த இரு கட்சிகளை சேர்ந்தவர்களையும் விரட்டி அடித்தனர்.
தொடர்ந்து வாக்குச்சாவடி முன்பு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து அந்த வாக்குச்சாவடியில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.