முதன்முதலாக வாக்களித்த மலைவாழ் மக்கள்

முதன்முதலாக வாக்களித்த மலைவாழ் மக்கள்

Update: 2022-02-19 16:44 GMT
தளி பேரூராட்சியில்  முதன்முதலாக மலை வாழ் மக்கள் வாக்களித்தனர். 75 ஆண்டு கால கனவு நிறைவேறியதால் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மலைவாழ் மக்கள்
உடுமலை வனப் பகுதியில் குருமலை, மேல் குருமலை, குளிப்பட்டி, மாவடப்பு, கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, காட்டுப்பட்டி, ஈசல்தட்டு, ஆட்டுமலை, கோடந்தூர், பொருப்பாறு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், உள்ளிட்ட மலைவாழ் கிராமங்கள் அமைந்துள்ளது. அவர்களுக்கு 75 ஆண்டுகளை கடந்தும் உள்ளாட்சியில் வாக்களிக்கும் உரிமை கிடைக்கவில்லை.
இந்த நிலையில் வார்டு வரையறைக்கு பின்பு தளி பேரூராட்சியில் குருமலை, மேல்குருமலை, பூச்சக்கொட்டாம்பாறை 16 வது வார்டிலும் அடிவாரப்பகுதியில் உள்ள திருமூர்த்திமலை 17 வார்டிலும் இணைக்கப்பட்டது.நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்பு உள்ளாட்சியில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதால் மலைவாழ்மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாக்களித்தனர்
இந்த நிலையில்நேற்று தளி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குருமலை வனப்பகுதியிலும் திருமூர்த்திமலை பகுதியிலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.அதன்படி 203 பெண்கள் உள்ளிட்ட 385 வாக்காளர்களை கொண்ட 16 வது வார்டு குருமலை வாக்குச்சாவடியில் 306 வாக்குகள் பதிவானது.133 பெண்கள் உள்ளிட்ட 234 வாக்காளர்களை கொண்ட 17 வார்டு திருமூர்த்திமலை வாக்குச்சாவடியில் 167 வாக்குகள் பதிவானது.
ஆக மொத்தம் தளி பேரூராட்சி 17 வார்டுகளில் 6 ஆயிரத்து 108 வாக்காளர்கள் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர்  என மொத்தம் 6 ஆயிரத்து  109 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4ஆயிரத்து 729 வாக்குகள் பதிவானது. இது வந்து 77.42 சதவிகிதமாகும்.  வாக்குப்பதிவு நிறைவு அடைந்தவுடன் பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மடத்துக்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. வாக்குப்பதிவை யொட்டி உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் மேற்பார்வையில் தளி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகண்ணன் தலைமையிலும் சங்கராமநல்லூர் பேரூராட்சியில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்