மயிலாடுதுறை மாவட்டத்தில் 65.77 சதவீதம் வாக்குப்பதிவு
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 65.77 சதவீதம் வாக்குப்பதிவானது. வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போட்டனர்.
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 65.77 சதவீதம் வாக்குப்பதிவானது. வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போட்டனர்.
வாக்குப்பதிவு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகளுக்கும், குத்தாலம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில், மணல்மேடு ஆகிய 4 பேரூராட்சிகளுக்கும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
குறிப்பாக பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தங்களுடைய வாக்குகளை செலுத்தினர். மயிலாடுதுறையில் 6-வது வார்டுக்காக அமைக்கப்பட்டிருந்த சங்கரா மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடிக்கு அருகே நேற்று காலை 9 மணி அளவில் வாக்காளர்களிடம் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்தனர். இதன் பின்னர் நிலைமை சீரானது.
எம்.எல்.ஏ.க்கள் வாக்குப்பதிவு
மயிலாடுதுறை அவையாம்பாள்புரத்தில் உள்ள அறிவாலயம் மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடியில் ராஜகுமார் எம்.எல்.ஏ. தனது வாக்கை பதிவு செய்தார். அதேபோல சீர்காழி தென்பாதியில் உள்ள வி.தி.பி. தர்மபுரம் ஆதீனம் நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வாக்களித்தார்.
சீர்காழி
சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளுக்கு உட்பட்ட 36 வாக்குச்சாவடி மையங்களிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து அமைதியான முறையில் வாக்களித்தனர். குறிப்பாக நகராட்சிக்கு உட்பட்ட வாணி விலாஸ் பள்ளி, சபாநாயகம் முதலியார் மேல்நிலைப்பள்ளி, அம்பி விலாஸ் பள்ளி, பணமங்கலம் நகராட்சி தொடக்கப்பள்ளி, சியாமளா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அங்கு வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். பிடாரி வடக்கு வீதி, தென்பாதி உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களிடம் வாக்கு கேட்டதால் போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
வைத்தீஸ்வரன்கோவில்
வாக்குச்சாவடி மையங்களில் சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வைத்தீஸ்வரன்கோவில் கீழவீதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
வாக்குச்சாவடிகளில் முதியவர்களுக்கு சக்கர நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் முன்னுரிமை அடிப்படையில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் கர்ப்பிணிகளுக்கும், கைக்குழந்தையுடன் வந்த பெண்களுக்கும் வாக்களிக்க முன்னுரிமை வழங்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
வைத்தீஸ்வரன் கோவில் கீழ வீதி, தெற்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு கேட்பது தொடர்பாக அரசியல் கட்சியினரிடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். வைத்தீஸ்வரன் கோவிலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி ஆகிய பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு விறு,விறுப்பாக நடந்தது.
நகராட்சிகள்- பேரூராட்சிகள்
மயிலாடுதுறை நகராட்சியில் 62.61 சதவீதம் வாக்குகள் பதிவாகின. சீர்காழியில் 67.54 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதேபோல குத்தாலம் பேரூராட்சியில் 66.32, மணல்மேட்டில் 73.72, தரங்கம்பாடியில் 66.41, வைத்தீஸ்வரன்கோவிலில் 78.91 சதவீத வாக்குகள் பதிவான.
இதில் நகராட்சிகளில் 64.07 சதவீதமும், பேரூராட்சிகளில் 69.47 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. மாவட்டம் முழுவதும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 65.77 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.