தியாகதுருகத்தில் ஜனநாயக கடமையாற்றுவதற்காக ஆம்புலன்சில் வந்து ஓட்டுப்போட்ட பெண் வாக்காளர்
தியாகதுருகத்தில் ஜனநாயக கடமையாற்றுவதற்காக ஆம்புலன்சில் வந்து ஓட்டுப்போட்ட பெண் வாக்காளர்
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் அப்துல் ஹமீது மனைவி பைசூன்மீ (வயது 72). இவருக்கு காலில் முறிவு ஏற்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என பைசூன்மீ அவரது உறவினர்களிடம் கூறினார். அவருக்கு தியாதுருகம் பேரூராட்சி 8-வது வார்டுக்குட்பட்ட அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டு இருந்தது தெரியவந்தது. பைசூன்மீயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய அவரது உறவினர்கள் முடிவு செய்தனர்.
ஆனால் அவருக்கு காலில் எலும்பு முறிவு இருந்ததால் படுக்கையில் வைத்துதான் அழைத்து செல்ல முடியும் என்ற நிலை உருவானது. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து பைசூன்மீயை ஆம்புன்ஸ்சில் வாக்குச்சாவடி மையத்துக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். பின்னர் அவரை வாக்குச்சாவடி மையத்துக்குள் ஸ்டிரச்சரில்(தள்ளுவண்டி) வைத்து தள்ளி சென்றனர். அங்கு ஆர்வத்துடன் வாக்களித்த பைசூன்மீ தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் மீ்ண்டும் அங்கிருந்து ஆம்புன்சில் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றார்.