மஞ்சூர் கோவை சாலையில் புதர்களை அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை
வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் மஞ்சூர்-கோவை சாலையில் புதர்களை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி
வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் மஞ்சூர்-கோவை சாலையில் புதர்களை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
3-வது மாற்றுப்பாதை
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கோவைக்கு குன்னூர் மற்றும் கோத்தகிரி வழியாக 2 சாலைகள் உள்ளன. கடந்த 2009-ம் ஆண்டு கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு ஊட்டி-குன்னூர்-மேட்டுப் பாளையம் சாலை துண்டிக்கப்பட்டது.
கோத்தகிரி சாலையில் பாதிப்பு ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து தடைபடும் அபாயம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்ல 3-வது மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டம் காரமடைக்கு 3-வது மாற்றுப்பாதை திட்டம் கொண்டு வரப்பட்டது.
புதர் சூழ்ந்து இருக்கிறது
இந்த சாலை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது. கொண்டை ஊசி வளைவுகளுடன் குறுகிய சாலையாக காணப்படுகிறது. மேலும் சாலையோரத்தில் புதர்கள் அதிகளவில் உள்ளன. காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையில் உலா வருகின்றன.
சாலையோரத்தில் புதர்கள் அதிகமாக இருப்பதால் வனவிலங்குகள் அங்கு நிற்பது தெரிவது இல்லை. மேலும் புதர் மறைவில் இருக்கும் வனவிலங்குகள் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
அகற்ற வேண்டும்
மஞ்சூர்-கோவை இடையே கெத்தை வழியாக அரசு பஸ்கள் இயக்கப் பட்டு வருகிறது. மேலும் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த சாலை குறுகலாக இருந்தாலும் அதில் பள்ளம் எதுவும் இல்லாமல் அழகாக இருக்கிறது.
ஆனால் சாலையோரத்தில் புதர் சூழ்ந்து இருப்பதால் சிறுத்தை, புலி, கரடி, யானை போன்ற வனவிலங்குகள் நின்றாலும் தெரியாது. இந்த வழியாக தற்போது வாகனங்கள் செல்லும் அளவு அதிகரித்து விட்டது.
எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு முள்ளியில் இருந்து கெத்தை வரை புதர்கள் சூழ்ந்து இருப்பதை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.