சுயேச்சை வேட்பாளரை மிரட்டிய தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல்

சின்னாளப்பட்டியில் சுயேச்சை வேட்பாளரை மிரட்டிய தி.மு.க. நிர்வாகி தாக்கப்பட்டார்.

Update: 2022-02-19 14:50 GMT
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் 10-வது வார்டு பெண்கள் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு ஈஸ்வரி என்ற பெண் ஓட்டுபோட வந்தார். அப்போது அவரது ஓட்டை ஏற்கனவே ஒருவர் செலுத்திவிட்டு சென்றதாக கூறி ஈஸ்வரியை ஓட்டுபோட  அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. 
இதைத்தொடர்ந்து ஈஸ்வரிக்கு ‘சேலஞ்ச்’ வாக்களிக்க மண்டல தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் அனுமதியளித்தார். அதையொட்டி அவர் வாக்கை செலுத்தினார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள  6-வது வார்டு வாக்குசாவடியில் சிவகாமி என்ற பெண்ணின் ஓட்டை முன்னதாக யாரோ போட்டு விட்டனர். இதனால் அவர் தன்னை ஓட்டு போட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மண்டல தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் அங்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் சிவகாமியிடம் விசாரணை செய்து கொண்டிருந்தார். 
வாக்குவாதம்
இதையடுத்து வாக்குச்சாவடி முன்பு தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் திரண்டனர். அப்போது சிவகாமிக்கு ‘சேலஞ்ச்’ வாக்களிக்க அனுமதிக்குமாறு அ.தி.மு.க.வினரும், சுயேச்சை வேட்பாளர் நாகபாண்டியும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாகபாண்டிக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
இதையடுத்து அங்கு வந்த போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்ட அனைவரையும் பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றினர். இதனிடையே சிவகாமிக்கு  ‘சேலஞ்ச்’  வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதையொட்டி அவர் ஓட்டு போட்டு விட்டு சென்றார்.
தாக்குதல்
இந்தநிலையில் பள்ளிக்கு வெளியே வந்த தி.மு.க. நிர்வாகி கணேஷ்பிரபு (அ.தி.மு.க. நகர செயலாளராக இருந்து சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தவர்) சுயேச்சை வேட்பாளர் நாகபாண்டியை பார்த்து மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து நாகபாண்டி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து கணேஷ்பிரபுவை சரமாரியாக தாக்கினர். அப்போது அங்கு போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் விலக்கி விட்டனர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதனிடையே சுயேச்சை வேட்பாளர் நாகபாண்டி, வாக்குசாவடி அலுவலர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், இந்த வாக்குசாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்