மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் பகுதிகளில் ஊராட்சி பகுதி டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுக்கும் மதுபிரியர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், ஊராட்சிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபிரியர்கள் திரண்டனர். இதனால் மது வியாபாரம் களை கட்டியது.
மாமல்லபுரம்,
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 கி.மீ தூர சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடப்பட்டன. ஆனால் தேர்தல் நடைபெற்று முடிந்த ஊராட்சி ஒன்றிய கிராம பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் களை கட்டியது.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் போன்ற 2 பேரூராட்சி பகுதிகளில் வார்டு கவுன்சிலர் தேர்தல் இன்று நடக்கிறது. இந்த நிலையில் இந்த 2 பேரூராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
மாமல்லபுரத்தில் உள்ள அயல்நாட்டு மது கடை உள்ளிட்ட 6 மதுகடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதனால் இங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வெங்கப்பாக்கம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த மதுபிரியர்கள் குவிந்தனர். இதனால் அங்கு மது வியாபாரம் நேற்று களைகட்டியது.
சென்னை புறநகர், திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் பகுதிகளில் இருந்து கூட்டம், கூட்டமாக மதுபிரியர்கள் இருசக்கர வாகனத்தில் வெங்கப்பாக்கம் டாஸ்மாக் கடைக்கு திரண்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.