கும்மிடிப்பூண்டி அருகே வேலை வழங்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியல்
கும்மிடிப்பூண்டி அருகே 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்தது அயநல்லூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட காமாட்சிபுரம் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 70 பேர் நேற்று அயநல்லூரில் இருந்து ரெட்டம்பேடு செல்லும் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதிக்கு உள்பட்ட இடங்களில் 100 நாள் வேலை வழங்கிட வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஊராட்சி மன்ற செயலாளர் (பொறுப்பு) குருமூர்த்தி, கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் வந்து பதில் சொல்ல வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதனால் போராட்டம் தொடர்ந்தது. இந்த நிலையில், தங்களது கோரிக்கை தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். இதனை ஏற்று தங்களது 1 மணி நேர சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.