வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக கூறி அ.தி.மு.க. உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் சாலை மறியல் திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல்லில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக கூறி அ.தி.மு.க. உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-02-19 13:32 GMT
திண்டுக்கல்:
வாக்குப்பதிவு
திண்டுக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. காலையில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். அவர்களிடம், வாக்குப்பதிவு மையங்களுக்கு அருகில் முகாமிட்ட வேட்பாளர்கள், வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களுக்கு அவற்றை வழங்கி தங்களுக்கு ஆதரவு திரட்டினர். சில இடங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சேகரிப்பு சம்பவங்களும் அரங்கேறின. அவர்களை தேர்தல் அலுவலர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே திண்டுக்கல் புனித சிறுமலர் தொடக்கப்பள்ளியில் மாநகராட்சி 28-வது வார்டுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இந்த வார்டில் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர், அ.தி.மு.க., பா.ஜ.க., ம.நீ.ம., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 13 பேர் போட்டியிடுகின்றனர்.
தர்ணா-சாலை மறியல்
இந்த நிலையில் 28-வது வார்டு பகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் சிலர் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் போதே, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று பணப்பட்டுவாடா செய்வதாக அ.தி.மு.க., பா.ஜ.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் தேர்தல் அலுவலர்களிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க., பா.ஜனதா, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் உள்பட 12 வேட்பாளர்களும் தங்கள் ஆதரவாளர்களுடன் வாக்குப்பதிவு மையம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். சிறிது நேரம் அவர்களின் போராட்டம் நீடித்தது. பின்னர் அங்கிருந்து வெளியேறிய வேட்பாளர்கள் சோலைஹால் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அப்போது ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தேர்தல் அலுவலர்கள், போலீசார் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் வார்டு பகுதியில் பணப்பட்டுவாடா நடந்ததா? என்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்