திண்டுக்கல் மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுபோட்டனர்
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. இதில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுபோட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள், பழனி நகராட்சியில் 33 வார்டுகள், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 18 வார்டுகள், கொடைக்கானல் நகராட்சியில் 24 வார்டுகள், 23 பேரூராட்சிகளிலும் 363 வார்டுகள் உள்ளன. இந்த 486 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 8, 11 ஆகிய 2 வார்டுகளும், பேரூராட்சிகளை பொறுத்தவரை கன்னிவாடியில் 13-வது வார்டு, கீரனூரில் 15-வது வார்டு, எரியோட்டில் 4-வது வார்டு, சித்தையன்கோட்டையில் 12-வது வார்டு, நிலக்கோட்டையில் 2, 13 ஆகிய வார்டுகள் என மொத்தம் 8 வார்டுகளில் கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதனால் மீதமுள்ள 478 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 61 பேர் போட்டியிட்டனர். அதில் திண்டுக்கல் மாநகராட்சியில் 275 பேரும், 3 நகராட்சிகளில் 355 பேரும், 23 பேரூராட்சிகளில் 1,431 பேரும் களத்தில் நின்றனர்.
737 வாக்குச்சாவடிகள்
இதையொட்டி மாவட்டம் முழுவதும் 737 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் 57 வகையான வாக்குச்சாவடி பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. அதோடு தேர்தல் பணிக்கு 3 ஆயிரத்து 612 அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் மதியமே அந்தந்த வாக்குச்சாவடிக்கு சென்று விட்டனர். இதையடுத்து அலுவலர்கள், வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் பொருட்களை பெற்று வாக்குச்சாவடிகளை வாக்குப்பதிவுக்கு தயார் செய்தனர். இதனால் நேற்று முன்தினம் மாலையில் இருந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
வாக்குப்பதிவு
இதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கே வாக்குச்சாவடிகளில் அலுவலர்கள் தயாராக இருந்தனர். பின்னர் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் 7 மணிக்கே வந்து வரிசையில் மக்கள் காத்திருந்தனர். இளைஞர்கள், புதிய வாக்காளர்களில் பலர் காலையிலேயே வந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி, கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய நகராட்சிகளில் மட்டுமின்றி 23 பேரூராட்சிகளிலும் மக்கள் மிகுந்த ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். காலையில் ஆண்கள், இளைஞர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு வந்தனர். ஆனால் நேரம் செல்லசெல்ல பெண்களும் அதிகமாக வரத்தொடங்கினர். இதனால் மதியம் பெண்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை ஏற்பட்டதை காண முடிந்தது.
விறுவிறுப்பு
அதேபோல் தள்ளாத வயதில் முதியவர்களும் வந்து ஓட்டுப்போட்டனர். இதில் நடக்க முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆட்டோக்களில் வாக்குச்சாவடிகளுக்கு வந்தனர். அது போன்றவர்களை வாக்குச்சாவடிக்குள் அழைத்து செல்வதற்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
அதேபோல் சக்கர நாற்காலிகளும் வைக்கப்பட்டு இருந்தன. அதில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை அமர வைத்து வாக்குச்சாவடிக்குள் அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள், உறவினர்களின் உதவியோடு தங்களுடைய வாக்கை செலுத்தினர். இதற்கிடையே பேரூராட்சி பகுதிகளில் கூலி வேலைக்கு சென்றவர்கள் மதியத்துக்கு பின்னர் வாக்களிக்க வந்தனர்.
இதனால் பேரூராட்சிகளில் மாலை வரை வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்ததை பார்க்க முடிந்தது. இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
----------
(பாக்ஸ்)
-----------
வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு
திண்டுக்கல் மாநகராட்சியில் 183 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் புனித ஜான்பால் மேல்நிலைப்பள்ளி, புனித செசிலியாள் நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கலெக்டர் விசாகன் சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்குப்பதிவு குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உடன் இருந்தார். அதேபோல் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜெசிந்தா லாசரஸ், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா ஆகியோரும் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தனர்.
உடல் வெப்ப பரிசோதனை
கொரோனா பரவலால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முககவசம் அணிந்த வாக்காளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முககவசம் அணியாத நபர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. அதேபோல் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. அதோடு வாக்காளர்கள் கையில் அணிந்து கொள்ள கையுறை, கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி ஆகியவையும் வழங்கப்பட்டன. இதற்காக வாக்குச்சாவடிகள் தோறும் தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.