தேர்தல் பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார் - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார் ஈடுபட உள்ளனர் என்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் தெரிவித்து உள்ளார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், மணவாள நகர் அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், செங்குன்றம், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பென்னலூர் பேட்டை, மீஞ்சூர் என மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் 20 நடமாடும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மாவட்டத்தில் 40 முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 282 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அங்கு தீவிர கண்காணிப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ பதிவு எடுத்து கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெற மாவட்ட போலீஸ் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.