கொள்ளிடத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
கொள்ளிடத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கொள்ளிடம்:-
கொள்ளிடத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானு சேகர், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய பணி மேற்பார்வையாளர் திருச்செல்வம் வரவேற்றார். ஒன்றிய கணக்காளர் கஜேந்திரன் அறிக்கை படித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
அங்குதன் (தி.மு.க.):- வேட்டங்குடி ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் முத்தரையர் கிராமத்துக்கு சுடுகாட்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனி தாலுகா
லட்சுமி பாலமுருகன் (தி.மு.க.):-
சிதம்பரத்தில் இருந்து காட்டூர் கிராமத்துக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். கோட்டையமேடு கிராமத்தில் மக்கள் யாரும் வசிக்காததால் தனி தீவாக காட்சி அளிக்கிறது. எனவே அங்கு சுற்றுலா மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புளியந்துறை ஊராட்சியில் புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும்.
மாலினி பூவரசன் (தி.மு.க.):-
திருமுல்லைவாசல் ஊராட்சியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியில் உயர் கோபுர மின் விளக்கை ஒளிர செய்ய வேண்டும்.
ரீகன் (அ.தி.மு.க.):- ஆரப்பள்ளம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதிய பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய ரேஷன் கடை
சிவபாலன் (பா.ம.க.):- கோதண்டபுரம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பில்படுகை கிராமத்தில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
பானுசேகர் (காங்கிரஸ்):- குத்தவாகரை கிராமத்திற்கு சுடுகாட்டு சாலை அமைத்து தர வேண்டும்.
ஒன்றிய ஆணையர்:- கொள்ளிடம் ஒன்றியத்தில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 847 பயனாளிகள் உள்ளனர். இதில் அனைவருக்கும் வீடு கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசு ஆஸ்பத்திரி
ஒன்றியக்குழு தலைவர்:- கொள்ளிடத்தை மையமாக கொண்டு அரசு தலைமை ஆஸ்பத்திரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளான ஆனைக்காரன்சத்திரம், கோபாலசமுத்திரம், புதுப்பட்டினம், திருமுல்லைவாசல் ஆகிய பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கொள்ளிடம் ஒன்றியத்தில் இந்த ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 5 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அந்த ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். கொள்ளிடத்தை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் சபிதா ராணி. அரசு டாக்டர் சிவனேசன், ஒன்றிய பொறியாளர் தாரா, வட்டார கல்வி அலுவலர் நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமுத்து நன்றி கூறினார்.